புது கட்சி தொடங்குகிறாரா ஓபிஎஸ்..? அவரே சொன்ன பதில்..!
ஓ.பன்னீர்செல்வம் தனது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகளுடன் சென்னையில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய ஓபிஎஸ், “2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நான் நிராயுதபாணியாக நின்றேன். மக்களவைத் தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளர் 33 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றதே இல்லை. இதன்மூலமாக மக்கள் சக்தி நம்முடன் இருப்பது நிரூபணமாகியுள்ளது. அதிமுகவை மீட்டெடுப்பதற்கான எங்கள் சட்ட போராட்டம் தொடரும். வரும் செப்டம்பர் 4ஆம் தேதி மதுரையில் எனது தலைமையில் மாநில மாநாடு நடத்தப்படும். எதிர்காலட்தில் நாம் என்னென்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்து அந்த மாநாட்டில் அறிவிப்பேன்” என்று குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “அதிமுகதான் எங்கள் உயிர்நாடி இயக்கம். அதில் சில சட்ட முரண்பாடுகள் ஏற்பட்டதால், அதனை பாதுகாக்கும் போராட்டத்தையே இப்போது நாங்கள் நடத்தி வருகிறோம். அதிமுகவில் இணைவதற்கு நான் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. எங்கள் மாநாட்டுக்கு சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படும்” என்று கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னமும் நீடித்து வருகிறீர்களா என்ற கேள்விக்கு, “சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நிகழலாம்” என்று தெரிவித்தார். மேலும், கட்சி தொடங்கி இப்போது வரை விஜய் நன்றாகவே செயல்பட்டு வருகிறார், அவருக்கு என்னுடைய ஆதரவு உண்டு என்றும் தெரிவித்தார். தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “நான் அதிமுககாரன். அதற்கு வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தனிக் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்காகவே செப்டம்பர் மாதம் மாநாடு நடத்துவதாகவும், அதற்காகவே இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தனிக் கட்சி தொடங்க வாய்ப்பே இல்லை என்று மறுத்துவிட்டார் ஓபிஎஸ்.