எல்.ஜி பெருங்காயம் வாங்குபவரா..?ஜாக்கிரதை..!எல்.ஜி., பெயரில் போலி பெருங்காயம் மூவர் கைது

சென்னையில் எல்.ஜி., பெருங்காயத்திற்கு அமோக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் சில நபர்கள் எல்.ஜி., பெருங்காயத்தின் பெயரிலேயே, போலி பெருங்காயத்துாள் தயாரித்து, அதேபோன்ற லேபிள்கள் ஒட்டப்பட்ட டப்பாக்களில் அடைத்து, விற்று வந்துள்ளனர்.
இது குறித்து, சென்னை சூளைமேடில் இயங்கும் எல்.ஜி., பெருங்காயம் நிறுவனத்திற்கு, தொடர் புகார்கள் வந்தன.
அவர்களது ஆய்வில், கொடுங்கையூரைச் சேர்ந்த சீனிவாசன், எல்.ஜி., பெருங்காயத்தை போலியாக தயாரித்து, கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர் பகுதிகளில் விற்பது தெரிய வந்தது.
இது குறித்த புகாரை அடுத்து, அயனாவரத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் அமலாக்க துறையினர், நேற்று கொடுங்கையூரில் உள்ள சீனிவாசன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், வீட்டில் எல்.ஜி., கூட்டு பெருங்காயத்தை போலியாக தயாரித்து விற்றது உறுதியானது.
இதையடுத்து, முறைகேடில் ஈடுபட்ட சீனிவாசன் மற்றும் அவரது கூட்டாளிகள் மணி, மூர்த்தியை கைது செய்து, அறிவுசார் சொத்துரிமைகள் அமலாக்க துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
போலியாக தயாரித்த அட்டை லேபிள்கள், பைகள், லேபிள் இயந்திரங்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.