கள்ளச்சாராயம் குடித்தால் 10 லட்சமா? எதிர்க்கட்சியினர் கேள்வி..! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கும் கலெக்டர்..!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 50 க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் உத்தரவின்படி தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மெத்தனால் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மாடூர் மற்றும் வீரசோழபுரம் கிராமங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், படிப்பு, தொழில், வீடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசின் உரிய வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி கலைஞர் கனவு இல்லத் திட்டம் அல்லது அரசின் இதர திட்டங்களின் கீழ் வீடு வழங்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டார்.