இனி இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்பது உண்மையா ? வெளியான முக்கிய தகவல்
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியுள்ள குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு அதன் மூலம் உணவு தானியங்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. மாநில அரசுகள் மூலமாக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டாலும் மத்திய அரசின் உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கிறது.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் அனைத்தும் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது அவசியம். அப்போதுதான் ரேஷன் உதவிகளைத் தொடர்ந்து பெறமுடியும். ரேஷன் உதவிகள் மட்டுமல்லாமல், அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கும் இதுபோன்ற விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் தங்களுடைய ரேஷன் கார்டில் ஆதார் சரிபார்ப்பு, மொபைல் நம்பர் அப்டேட் மற்றும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ரேஷன் கார்டில் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்காகவே இதுபோன்ற விதிமுறைகளை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, ரேஷன் அட்டைதாரர்கள் கேஒய்சி சரிபார்ப்பு செய்வதற்கான கால அவகாசம் 2024 மார்ச் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. ஏற்கெனவே இதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், கடைசியாக வெளியான அறிவிப்பில் மார்ச் 31தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கேரள மாநிலத்தில் கேஒய்சி சரிபார்ப்பு விஷயத்தில் ரேஷன் அட்டைதாரர்களில் 10 சதவீதத்தினர் கூட கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அங்குள்ள 1.54 கோடி கார்டுகளில் பெரும்பாலானோர் இந்த வேலையை முடிக்கவில்லை. மார்ச் 15ஆம் தேதியே இதற்கான நடவடிக்கைகள அரசு தீவிரப்படுத்திய நிலையில், பாயிண்ட் ஆஃப் சேல் இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த வேலையை முடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது.பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கேரள மாநில உணவு வழங்கல் துறை சார்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு, கேஒய்சி சரிபார்ப்புக்கான காலக்கெடுவை மே 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசிடமிருந்து இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
மார்ச் 31ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு இதன் பிறகு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அதுபோன்ற உத்தரவுகள் எதுவும் இல்லை என்றும், கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.