இது உண்மையா ? அண்ணாமலை மத்திய அமைச்சர்... பாஜக தேசியத் தலைவராகும் வானதி சீனிவாசன்?

தமிழ்நாட்டில் காலூன்ற துடித்து வரும் பாஜக வரும் சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறும் முனைப்பில் தயாராகி வருகிறது.இதற்காக பலமான கூட்டணியை அமைக்க தயாராகி வருகிறது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக (ADMK) வெளியேறி விட்டது. இதனால் அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக தலைமை முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு பாஜக மூத்த தலைவருமான வானதி சீனிவாசன் பாஜகவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவின் தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இதனால் புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த ஜனவரி மாதமே புதிய தலைவர் நியமிக்கப்பட இருந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தல் உள்பட பல்வேறு காரணங்களால் இது தாமதமாகி வந்தது.
பாஜக தேசியத் தலைவர் ரேஸில் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, ஜி கிஷன் ரெட்டி, ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி ஆகியோர் உள்ளனர். இந்த போட்டியில் பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் (Vanathi Srinivasan) உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக பிரமாண சமூகத்தை சேர்ந்தவர்களை தேசியத் தலைவர்களை நியமிப்பதை பாஜக வழக்கமாக வைத்துள்ளது. மேலும் பாஜக தலைவர்கள் தேர்வில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
அதன்படி ஆர்எஸ்எஸ் அமைப்பு பரிந்துரையின்பேரில் மேற்கண்ட 4 பேரும் தேசியத் தலைவர்கள் ரேஸில் உள்ளனர். இந்த முறை தென் மாநிலங்களை சேர்ந்த ஒருவரை அதுவும் ஒரு பெண்ணை தேசியத் தலைவராக கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளதாகவும், ஆகையால் புரந்தேஸ்வரி, வானதி சீனிவாசன் ஆகியோர் தேசியத் தலைவர்கள் ரேஸில் முன்னணியில் இருப்பதாகவும் பாஜக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
நீண்டகாலமாக பெரிய பதவியின்றி கட்சிக்காக உழைத்து வரும் வானதி சீனிவாசனுக்கு பெருமை அளிக்கும்விதமாகவும், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தும் அவரை தலைவராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வானதி சீனிவாசன் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டால் ''தமிழ்நாட்டு பெண்ணை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம்'' என பெருமையுடன் கூறி பெண்களையும், பிராமண சமுதாய மக்களையும் கவர முடியும் என பாஜக நினைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மத்திய அமைச்சராகும் அண்ணாமலை?
தமிழ்நாடு பாஜக தலைவர்களாக இருந்தவர்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல பாஜக என்றுமே தவறியதில்லை. உதாரணத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் நியமிக்கப்படார். எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதேபோல் அண்ணாமலைக்கும் பெரிய கவுரவம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
அண்ணாமலையை பொறுத்தவரை தமிழ்நாடு பாஜக வளர்ச்சியில் அவரது பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. இன்று மூலை, முடுக்கெல்லாம் பாஜக சென்றடைந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை என்பதை யாரும் மறுக்க முடியாது. சொல்லப்போனால் முந்தைய பாஜக தலைவர்களை விட திமுகவை அட்டாக் செய்வது, அரசின் குற்றங்களை பட்டியலிடுவது, போராட்டங்கள் நடத்துவது என எல்லாவற்றிலும் அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார்.