தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றாமல் மத்திய அரசு மீது வீண் பழியை சுமத்துவதா..? அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு வழங்கிய நலத்திட்டங்களின் மதிப்பு ரூ.10.76 லட்சம் கோடி. தமிழகத்தின் நேரடி வரிப்பங்கீடைவிட, இது இரண்டு மடங்கு அதிகம். ஆனால், மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசின் பங்குஎன்ன என்று எதுவும் தெரியாமல், வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே பதிவிட்டிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கடந்த 2006 தேர்தலின்போது, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியான, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ.9,386 கோடி நிதியில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதேபோல் மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ.5,800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு மத்திய அரசு சுமார் ரூ.2 லட்சம் கோடி செலவு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரூ.6,331 கோடி: கடந்த 2009 – 2014 வரையில் ஆட்சியில் இருந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்தது சுமார் ரூ.800 கோடி மட்டுமே. ஆனால், பிரதமர் மோடி, இந்த ஆண்டு மட்டும் ரூ.6,331 கோடிக்கான ரயில்வே திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கியுள்ளார். ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் மோடி தமிழகத்துக்கு வழங்கினார். ஆனால், மாவட்டத்துக்கு ஒருமருத்துவக் கல்லூரி அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, அமைத்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை எத்தனை?
பால் விலை, தயிர் விலை, சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பத்திர பதிவுக் கட்டணம் என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, நடுத்தர மக்கள் வாழ்க்கையில் பெரும் பொருளாதார சுமையை ஏற்றிவிட்டு, வருமானவரி குறித்து ஸ்டாலின் பேசுகிறார். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைகூட முழுமையாக நிறைவேற்றாமல், மத்திய அரசின் மீது வீண் பழியை சுமத்துவதா, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற நலத் திட்டங்களை நிறைவேற்றிய பிரதமர் மோடி, வரும் காலங்களிலும் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவார். ஆனால் இங்கு திமுக அரசோ, தாங்கள் செய்யவேண்டிய பணிகளை மறந்து மற்றவர்களை விமர்சிப்பதை முழு நேர வேலையாகக் கொண்டுள்ள போக்கை இனிவரும் காலங்களிலாவது மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.