1. Home
  2. தமிழ்நாடு

எரிய வேண்டியது அடுப்பா? வயிறா? - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

1

கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது. அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தில் பயன் பெறுபவர்கள், பயன் பெறாதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் விலை உயர்வு பொருந்தும்.


இப்போது ரூ. 818.50 விற்பனை செய்யப்பட்டு வரும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை இனி ரூ.868.50க்கு விற்பனையாக உள்ளது. நாளை முதல் உடனே இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன. சிலிண்டர் விலை உயர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மு.க.ஸ்டாலின்தனது எக்ஸ் பக்கத்தில், “நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது சர்வாதிகார பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும்” என்று விமர்சனம் செய்துள்ளார்.


உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே என்று குற்றம்சாட்டிய அவர், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது தெரிவித்தார்.


மேலும், “அடாவடியாக விலை உயர்த்திவிட்டு தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. ஒன்றிய பாஜக அரசு தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கியுள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஏன் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like