இது மழை காலமா?...வெயில் காலமா..? 9 இடங்களில் சதமடித்த வெயில்..!
அண்டை மாநிலமான கேரளா ,கர்நாடகா ,புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை கோடைக்காலம் முடிந்தும் வெயில் வாட்டி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். மேலும் இன்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப்டம்பர் 19 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, ஈரோடு, கரூர், மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நேற்று வெயில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.