1. Home
  2. தமிழ்நாடு

இட்லி/தோசை மாவு புளித்து விட்டதா? இதை கொஞ்சம் கலந்து பாருங்க..!

1

இட்லி மாவு புளிக்க ஆரம்பித்தால், சிறிது இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுதை புளித்த மாவில் சேர்க்கவும். இப்படி செய்வதால், இஞ்சி மற்றும் பச்சை மிளகாயில் உள்ள தன்மை மாவின் புளிப்பை குறைக்க உதவுகிறது. தோசை மாவிற்கும் இந்த டிப்ஸைப் பயன்படுத்தலாம்.

 

புளித்த இட்லி அல்லது தோசை மாவைப் பயன்படுத்துவதற்கு முன் ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும். இதனால், புளிப்பு சுவை குறைந்து மாவின் சுவை அதிகரிக்கிறது.

 

இட்லி மாவு புளித்துவிட்டதாக தோன்றினால், இந்த முறை அதனுடன் சிறிது அரிசி மாவை சேர்க்கவும். இப்படி செய்வதால் புளிப்புத் தன்மை குறைகிறது. அரைத்த மாவில் அரிசி மாவை சேர்ப்பதால் சுவை குறையும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் இப்படி செய்வதன் மூலம் இட்லி மென்மையாக வரும்.

புதிய இட்லி அல்லது தோசை மாவு இருந்தால், புளித்த மாவில் இதனை கொஞ்சம் சேர்க்கவும். இப்படி செய்வதால் புளிப்பு தன்மை நீங்குவது மட்டுமல்லாமல் மாவும் வீணாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

மாவு புளிக்காமல் இருக்க சில டிப்ஸ்:

  1. மாவு அரைக்கும் பொழுது தேவைக்கு அதிகமாக உப்பை பயன்படுத்துவதால், சில நேரங்களில் மாவு வேகமாக புளிக்க தொடங்கிவிடுகிறது. எனவே, ருசிக்குத் தேவையான அளவு உப்பை பயன்படுத்த வேண்டும்.
  2. வெப்பநிலை அதிகமாக இருக்கும் காலங்களில், மாவு நான்கு மணி நேரத்திற்குள் புளித்து பொங்கிவிடும். இதனால், இரவு முழுவதும் மாவை வெளியில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், இடையிடையே மாவை சரி பார்க்க வேண்டும். குளிர் காலத்தில், எவ்வளவு மணி நேரம் ஆனாலும் கூட மாவு புளிக்காது. இந்த நேரத்தில், மாவின் அளவு இரட்டிப்பாக மாறினால், அது நன்கு புளித்து விட்டதாக கருத்தப்படுகிறது.
  3. ஒவ்வொரு முறையும், தோசை அல்லது இட்லி செய்யும் பொழுது குளிர்சாதனப்பெட்டியில் இருந்து மாவை வெளியே எடுத்து வைப்பது வழக்கம் தான். ஆனால், இப்படி செய்வதன் மூலம் மாவு வேகமாக புளித்து விடும். அதனால், மொத்த மாவையும் வெளியே எடுத்து வைக்காமல், தேவையான அளவு மட்டும் வெளியே எடுத்து பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
  4. உளுத்தம் பருப்பை அதிகமாகப் பயன்படுத்தினாலும், மாவு வேகமாக புளிக்க வாய்ப்புள்ளது. காரணம், உளுத்தம் பருப்பு நொதித்தல்(Fermentation) செயல்முறையை வேகப்படுத்துகிறது. எனவே, அதிகம் உளுத்தம் பருப்பு பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  5. தோசை சுவையாக மற்றும் மென்மையாக வர வேண்டும் என்பதற்காக வெந்தயம் பயன்படுத்துகிறோம். ஆனால், இவற்றை அதிகமாக சேர்ப்பதால் மாவு வேகமாக புளித்து விடுகிறது. எனவே, கவனமாக பயன்படுத்துங்கள்.

 ஒரு வாரம் வரை இட்லி மாவு புளிக்காமல் இருக்க :

இட்லி தோசைக்கு மாவு அரைக்கும்போது அரிசியை 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். அதற்கு மேல் அரிசி ஊறினால் மாவு விரைவில் புளிப்புத்தன்மையை எட்டிவிடும். அதேபோல் உளுந்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊறவைக்கூடாது. அதேபோல் மாவு அரைக்கும்போது அதிக நேரம் அரைக்க கூடாது.

கிரைண்டரில் மாவு ஆட்டும் போது ஐஸ் வாட்டர் ஊற்றி மாவு அரைப்பது நல்லது. அதேசமயம் உளுத்தம் பருப்பு சேர்த்து அரிசி ஆட்டும்போது, மாவை கையில் தள்ளிவிடக் கூடாது. ஒரு கரண்டியை பயன்படுத்தி தள்ளிவிடலாம். அதேபோல் உப்பு சேர்க்காமல் மாவை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சில்வர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பாத்திரத்தின் உள், அடிப்பக்கத்தில் வாழை இலையை வைக்க வேண்டும். வாழை இலை வைக்கும் போது, நாம் சாப்பிடக்கூடிய பகுதி மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்போது இலைக்கு மேலே புதிதாக அரைத்த மாவை ஊற்றி விடுங்கள். மாவு ஊற்றிய பின்பு மாவுக்கு மேலே ஒரு வாழை இலையை கவிழ்த்தி வைத்து பாத்திரத்தை மூடி பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

இப்படி செய்வதால் 15 நாட்கள் வரை மாவு புளிக்காமல் இருக்கும். இந்த மாவில் உப்பு சேர்க்க கூடாது. சமைக்கும்போது தேவையான அளவு மாவை எடுத்து, அதில் உப்பு சேர்த்து பயன்படுத்தலாம்.

வாழை இலைக்கு பதிலாக இரண்டு வெற்றிலையை கூட இப்படி பயன்படுத்தலாம். வெற்றிலையின் உள்பக்கம் மாவில் படும்படி வைக்க வேண்டும்.

அடுத்தமுறை வீட்டில் இட்லி மாவு அரைக்கும் போது இந்த குறிப்பை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்…

Trending News

Latest News

You May Like