இதை செய்தால் மட்டும் தான் கூட்டணி என இபிஎஸ் அறிவிக்க தயாரா?: ஸ்டாலின் சவால்

நீலகிரி மாவட்டம் சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் 143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கை வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், உதகைக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
உதகைக்கான அறிவிப்புகளைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
"உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடம். இந்தியாவிலேயே பட்டினிச் சாவே இல்லாத மாநிலம் என்று சாதித்திருக்கிறோம். ஒன்றிய அரசு வெளியிட்ட தகவலில் 9.6% வளர்ச்சியோடு இந்தியாவில் அதிகம் வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் முதலிடம் என்பது மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சிறந்த வளர்ச்சி விகிதம் இதுதான்.
எல்லா மாநிலங்களிலும் வளர்ச்சி விகிதம் குறைந்து வரும் சூழலில், தமிழ்நாடு மட்டும் டாப் கியரில் செல்வதாகச் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி, தென் மாநிலங்கள் உள்ளிட்ட மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதிகள் விழுக்காடு குறையாது என்கிற உறுதிமொழியை தமிழ்நாட்டு மண்ணில் இருந்தபடி நீங்கள் வழங்க வேண்டும். இதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள் உயிரிழந்ததற்கு திமுக மீது குற்றம்சாட்டி எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு வரவில்லை. பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது, நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்காதது ஏன்? பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன், நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்தால் தான் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.