மனித உயிர்களை விட இ.எம்.ஐ., பெருசா..? வங்கிகள் மீது கேரள ஐகோர்ட் அதிருப்தி!
கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக, வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டன. இதில், சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என அடுத்தடுத்த பேரிடர்களால், வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த மக்கள் நிர்கதியாக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். அதன்மூலம், மக்களுக்கு தேவையான உதவிகளை கேரள அரசு செய்து வருகிறது.
முதற்கட்டமாக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. அப்படி வரவு வைக்கப்பட்ட பணத்தில் இருந்து மாதாந்திர தவணையை வங்கிகள் பிடித்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு கேரள அரசு வங்கிகள் மீது அதிருப்தியை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த கேரள ஐகோர்ட், வங்கிகள் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
ஏ.கே., ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் ஷ்யாம் குமார் வி.எம்., ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ‘வங்கிகள் தவணையைத் தொகையை திரும்பப் பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எங்களுக்கு இல்லை. ஆனால், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்ட நிதியில் இருந்து இ.எம்.ஐ.,யை எடுக்கலாமா’ எனக் கேள்வி எழுப்பினர்.