உங்கள் IRCTC கணக்கில் நண்பர்களுக்கு புக் செய்தால் சிறை தண்டனையா? ஐஆர்சிடிசி சொல்வதென்ன ?
நாம் தொலைதூர பயணங்களுக்கு முன்பதிவு செய்யும்போது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி மூலம் புக் செய்கிறோம். முன்னர் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்யும் நடைமுறை இருந்தது.
ஆனால், தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஐஆர்சிடிசி மொபைல் செயலியில் தனிப்பட்ட நபரின் பயனர் ஐடியை பயன்படுத்தி டிக்கெட் புக் செய்யலாம்.
அந்த வகையில், தனிப்பட்ட பயனார் ஐடியைப் பயன்படுத்தி நண்பருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ டிக்கெட் புக் செய்தால் சிறை செல்ல நேரிடும் அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்ற தகவல் பரவியது.
இந்த நிலையில், இதற்கு ஐஆர்சிடிசி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பக்கத்தில், "தனிப்பட்ட பயனர் ஐடியில் இருந்து வேறுபட்ட பெயர்களில் டிக்கெட் புக் செய்வது தண்டனைக்குரியது என்பது போலியானது.
ஒருவர் தங்களது தனிப்பட்ட பயனர் ஐடியில் இருந்து ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட் வரை புக் செய்யலாம். அதேநேரம், அந்த பயனர் ஐடி ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டிருந்தால், ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம்.
அதேபோல், தனிப்பட்ட பயண ஐடியில் இருந்து வணிக நோக்கத்திற்காக டிக்கெட்டுகளை புக் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால், ரயில்வே சட்டம் 1989 பிரிவு 143-ன் கீழ் குற்றமாக கருதப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The news in circulation on social media about restriction in booking of e-tickets due to different surname is false and misleading. pic.twitter.com/xu3Q7uEWbX
— IRCTC (@IRCTCofficial) June 25, 2024