அதிமுக விஜய்யுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறதா? எடப்பாடி பதில் இது தான்..!
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாகவுள்ளன. எனவே, அரசு உடனடியாக அந்த காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிர்ப்பப்பட வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் வழஙக்கப்பட வேண்டும். தீபாவளி பண்டிகையை அவர்கள் கொண்டாடும் விதமாக முன்கூட்டிய அவர்களுடைய ஊதியத்தை வழங்க வேண்டும்.
சென்னை மாநகரத்தில் 9 பூங்காக்கள் உள்ளன. அங்குள்ள விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு தாரைவார்க்கப் போவதாக செய்திகள் வருகின்றன. அது கண்டிக்கத்தக்கது. தனியாரிடம் கொடுத்தால், அவர்கள் கட்டணம் வசூலிக்கும் சூழல் ஏற்படும். இதனால், நடுத்தர மற்றும் சாதாரண மக்கள் அந்த மைதானத்தைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். டான்டீ தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸை அரசு அறிவித்து உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்,” என்றார்.
அப்போது அவரிடம் விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு, “தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்துகின்றனர். தவெக சார்பில் மாநில மாநாட்டை அக்கட்சியின் தலைவர் நடத்தியிருக்கிறார். இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்,” என்றார்.
அப்போது விஜய் அதிமுகவை பெரிய அளவில் விமர்சிக்கவில்லை, கூட்டணி ஆட்சியில் பகிர்வு என்று பேசியிருக்கிறார். வருங்காலத்தில், அதிமுக விஜய்யுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறதா? என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் அவர் தெரிவித்திருக்கிறார். அதில் இது சரியா, தவறா என்று நாம் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது.
விஜய் இப்போதுதான் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். முதல் மாநில மாநாட்டை நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைக்கப்படும். அதிமுக சிறப்பாக செயல்பட்டிருப்பதால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை,” என்றார்.
பாஜக, திமுகவை விஜய் விமர்சித்து பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு,“ விஜய் ஒரு கட்சியின் தலைவராகிவிட்டார். அந்த கட்சிக்கு என்ன கருத்து இருக்கிறதோ, அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. கொள்கை இல்லாத கட்சிகள்தாம் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஒத்த கொள்கையுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருப்பதாக முதல்வரும் கூறுகிறார், அந்த கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூறுகின்றனர்.
அவர்கள் எல்லாம் ஒரே கொள்கைகளைக் கொண்ட கட்சியா? அப்படியென்றால், அவர்கள் ஒரே கட்சியாக இருக்கலாமே. தனித்தனி கட்சிகள் தேவையில்லையே. அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் அமைக்கப்படும். அதிமுகவைப் பொருத்தவரை எங்களுக்கென்று கொள்கை இருக்கிறது. மறுபடியும் கூறுகிறேன். கூட்டணி என்பது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்படும். கொள்கை என்பது நிலையானது,” என்று இபிஎஸ் கூறினார்.