அதிமுகவுடன் இணைகிறதா அமமுக..?: டி.டி.வி.தினகரன் சொல்வதென்ன..?
நீலகிரி மாவட்டம் குன்னூரில், அமமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது: “ஓராண்டு திமுக ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் ஆனவுடன் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார்.
குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார். அதை மறந்து விட்டார். சொத்து வரியை உயர்த்த மாட்டேன் என்று கூறினார். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதாக சொன்னார். அவற்றை மறந்து விட்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாவற்றையும் மூடுவிழா செய்து விட்டனர்.
திமுக ஆட்சி விளம்பரங்களால் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு லஞ்ச ஊழல் ஒழிப்பு என்பதெல்லாம் ஊடக வெளிச்சத்துக்காக மு.க.ஸ்டாலின் செய்கிறார்.
காவல்துறையினருக்கு அதிகாரம் இருப்பதால் அத்துமீறி செயல்படுவது மக்கள் மத்தியில் அவப்பெயரைத் தான் ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் கவனமுடன் செயல்பட வேண்டும்.
அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பில்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும்.
சசிகலா பாஜகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கூறி வருகிறார். அதுகுறித்து சசிகலா தான் கூற வேண்டும்” என்று அவர் கூறினார்.