நடிகர் விஜய் இளைய காமராஜரா? சீமான் காட்டமான விமர்சனம்..!

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும்10 மாதங்களே உள்ளதால், அதற்காக தவெக தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் தவெக பகிரங்கமாக அறிவித்தது. ஆனால், பாஜகவை விட திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் விஜய் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதே சமயம் பாஜக, திமுக தவிர வேறு எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கத் தயார் என்றும் அறிவித்துள்ளது. ஆனால், பாஜகவின் பி டீம் தான் விஜய்யின் தவெக என்றும் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறது திமுக.
விஜய் இம்மாத இறுதியில் இருந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து கள அரசியலை மேற்கொள்ளத் தொடங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பரிசளிப்பு நடத்தி வருகிறார். அண்மையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய பெற்றோர், கல்விக்கு உதவும் தொண்டு செய்வதால் இளைய தளபதி அதோடு சேர்த்து, இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார். அப்போது கொஞ்சம் ஜெர்க் ஆன விஜய், அந்த நபரைக் கட்டிக்கொண்டார். ஆனால், விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா என காங்கிரஸ் கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இந்த மாதிரி கேட்க நேரிடும் என்றுதான் எங்கள் தாத்தா(காமராஜர்) முன்பே இறந்துவிட்டார். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இளைய காமராஜர்' என்று விஜயை யார் சொன்னாரோ அவருக்கு காமராஜர் யார் என்று தெரியாது. அவர் ஆசிரியர் என்கிறார்கள். அவர் என்ன படிச்சாரோ, ஆனால், காமராஜரை படிக்கவில்லை. காமராஜர் 50 படம் நடித்துவிட்டு முதலமைச்சராக வரவில்லை, அரசியலுக்கு வரவில்லை” என்று விமர்சித்தார்.
முன்னதாக விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்தும் வரை அவருக்கு ஆதரவாக சீமான் தொடர்ந்து பேசி வந்தார். தவெகவுடன் கூட்டணி குறித்து எல்லாம் சூசகமாக பேசி வந்தார். ஆனால், தவெகவின் முதல் மாநாட்டில் திராவிடமும் தமிழ் தேசியமும் தனது இரு கண்கள் என விஜய் அறிவித்தார்.
அது முதல் விஜய்யை சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். திராவிடம் குறித்து பேசும் விஜய், கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் அல்லது அகில உலக வெற்றிக் கழகம் என பெயர் வைத்து இருக்கலாமே என்றெல்லாம் காட்டமாக கேட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது காமராஜ விவகாரத்தை முன்வைத்து மீண்டும் ஒருமுறை விமர்சனம் செய்துள்ளார் சீமான். இதற்கு தவெக தரப்பில் பதிலடி தரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.