முன்னாள் முதல்வர்களை விட நடிகர் விஜய் பெரிய அரசியல்வாதியா..? சீமான்
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட போதிலிருந்தே அதன் தலைவர் விஜய்க்கு ஆதரவாகவே நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசி வந்தார். தம்பி தம்பி என்றே அழைத்து வந்தார். இதனால் அவர் விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலை கிராமத்தில் விஜய் கட்சி சார்பில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் கொள்கை, செயல் திட்டங்களை விஜய் விவரித்தார். மேலும் தனது அரசியல் எதிரி யார் என்பதையும் தெரிவித்திருந்தார். தமிழ் தேசியமும் திராவிடமும் தனது கண்கள் என அவர் தெரிவித்திருந்தார். இதனால் சீமான் அதிருப்தி அடைந்தார். இது எப்படி கொள்கையாகும். தமிழ் தேசியம் வேறு திராவிடம் வேறு. அதாவது கருவாட்டுக் குழம்பு, சாம்பாரை கருவாட்டு சாம்பார் என அழைக்க முடியுமா, அப்படித்தான் உள்ள விஜய்யன் கொள்கை என விமர்சித்திருந்தார். மேலும் கொள்கை என வந்துவிட்டால் அண்ணன், தம்பி என்பதெல்லாம் பார்க்க மாட்டேன். வாட் ப்ரோ, இட்ஸ் ராங் ப்ரோ என்றெல்லாம் நக்கல் அடித்தார்.
மேலும் தான் யாருடனும் கூட்டணி இல்லை, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டி என அறிவித்திருந்தார். மேலும் எனக்கு குட்டி ஸ்டோரி எல்லாம் தெரியாது, நாங்க இதுல பாதி, அதுல பாதி எல்லாம் கிடையாது என பல்வேறு சந்தர்ப்பங்களில் விஜய்யை குத்தி காட்டி பேசினார்.
இந்த நிலையில் விஜய் கட்சியிலிருந்து சீமான் கட்சிக்கு சில நிர்வாகிகள் தாவினர். அது போல் சீமான் கட்சியில் இருந்தும் ஏராளமானோர் தவெகவுக்கு தாவினர். இது சீமானை கோபமடையச் செய்துள்ளது. இந்த நிலையில் நாகர்கோவிலில் சீமான் பேசுகையில் விஜய் என்ன பெரிய தலைவரா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா, கருணாநிதி இருந்த காலத்திலேயே கட்சியை தொடங்கியவன் நான். ஜெயலலிதா, கருணாநிதியைவிட விஜய் பெரிய தலைவரா? அவர்கள் கூட்டாத கூட்டத்தையா விஜய் கூட்டிவிட்டார். விஜய்யால் எனக்கு வாக்கு வங்கி பாதிக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். நான் அவருக்கு ஒரு சவால் விடுகிறேன். ஒரே தொகுதியில் நாங்கள் இருவரும் போட்டியிடுகிறோம். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் யார் வெற்றி பெறுகிறார் என்பதை பார்ப்போம். கூட்டணி கண்டிப்பாக வைக்கக் கூடாது. நான் தனித்து போட்டியிட்டு ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்றுள்ளேன். 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் நான் யார் என்பது தெரியும்.
பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்கள் தேடியவர்கள் அல்ல, என்னை விரும்பிய மக்கள். என்னை பின் தொடரும் மக்கள் அனைவரும் போராட்ட களத்தில் தலைவரை தேடுபவர்கள். எனது கட்சியில் இருந்து பிற கட்சியில் சேர்ந்தவர்கள் என கூறுவோர், அவர்களிடம் இருக்கும் நாதக கட்சி உறுப்பினர் அட்டையை காட்டச் சொல்லுங்கள்.
மொழி, இனம் என அடையாளப்படுத்துவது பிரிவினைவாதம் எனக் கூறுகிறார். உலகம் முழுவதும் மொழியின் அடிப்படையில்தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், உங்கள் கட்சியை உலக வெற்றிக் கழகம் என்று தொடங்கியிருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்தது ஏன்?
உங்களுக்கு கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் முழுவதும் ரசிகர்கள் அதிகம். கேரளாவில் கட்சி தொடங்காமல் இங்கே வந்தது ஏன்? இதே கேள்விதான் அண்ணாமலையிடமும் கேட்டேன். கர்நாடகத்தில் பாஜக தலைவர் ஆகியிருக்கலாமே என்று. கார்த்திகேய பாண்டியன் என்ற தமிழன் ஒடிஸாவை ஆள முயற்சி செய்தவுடன், தமிழன் ஒடிஸாவை ஆட்சி செய்வதா எனக் கூறி அனைவரும் அவரை தோற்கடித்தீர்கள். அதையே நான் பேசினால் பாசிசம், நீங்கள் பேசினால் தேசியவாதமா? இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.