மாற்றுச் சான்றிதழில் ஒழுங்கீனம்.. மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை..!
தமிழகத்தில் சமீபகாலமாக, மாணவர்கள் ஆசிரியர்களை ஆபாசமாக பேசுவது, மிரட்டுவது, பள்ளிகளின் மேஜை, நாற்காலிகளை உடைப்பது, ஆசிரியர்கள் முன்பு நடனமாடுவது, மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடுதல் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று பாமக உறுப்பினர் ஜி.கே. மணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது;
“மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச் சான்றிதழ் மற்றும் நடத்தைச் சான்றிதழில் என்ன காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.
மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது. செல்போன் எடுத்து வருவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வரும் கல்வி ஆண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகள் நடத்திய பின்னரே பாடங்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.