ஈரானில் இஸ்ரேல் தாக்குதலில் ராணுவத் தலைமைத் தளபதி உயிரிழப்பு..!

அணுசக்தி வாக்குறுதிகளை நிறைவேற்ற ஈரான் தவறிவிட்டதாக ஐ.நா.வின் கண்காணிப்பு அமைப்பு முதன்முறையாக குற்றம்சாட்டியது. மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ஈரானுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, அந்நாட்டில் இருந்து தங்களது தூதர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டது.
இந்தச் சூழலில், ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது. இஸ்ரேல் வான்வழியாக தாக்குதலை மேற்கொண்டது. ஏற்கெனவே காசா முனையில் பயங்கர தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேலின் கவனம் தற்போது ஈரான் பக்கம் திரும்பியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் ஈரானின் புரட்சிகர ராணுவ அமைப்பின் தலைமைத் தளபதி ஹுசைன் சலாமி கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இஸ்லாமிய குடியரசு செய்தி முகமை வெளியிட்ட செய்தியில், "டெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர ராணுவப் படை மேஜர் ஜெனரல் ஹுசைன் சலாமி படுகொலை செய்யப்பட்டார்" என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர ராணுவ அமைப்பின் மூத்த கமாண்டர் கோலமாலி ரஷீத் மற்றும் அணுசக்தி அலுவலர்களான ஃபெரிடவுன் அப்பாசி மற்றும் முகமது மெஹ்தி தெஹ்ராஞ்சி ஆகியோரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.