ஈரானிய கொள்ளையன் பகீர் வாக்குமூலம் : 1 லட்சம் செலவு செய்தால் 20 லட்சத்திற்கு நகைகள் பறிக்க வேண்டும்..!

சென்னையில் ஆறு பெண்களிடம், 27 சவரன் நகைகளை பறித்த, 23 - 28 வயதுடைய ஈரானிய கொள்ளையர் மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் குலாம் உசேன், 28 என்பவர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற இருவரிடம் விசாரணை நடக்கிறது. அவர்களில், சல்மான் உசேன் என்பவர் அளித்துள்ள வாக்குமூலம்:
எங்களின் பூர்வீகம் ஈரான். அங்கிருந்து, எங்களின் தாத்தாக்கள், மஹாராஷ்டிர மாநிலம் அம்புவேலி பகுதியில் அகதிகளாக குடியேறினர். நாங்கள் ஷியா முஸ்லிம்கள். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வருகிறோம். நாங்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சொந்த ஊருக்கு திரும்புவோம். எங்கள் குழுவில், 20 பேர் உள்ளனர். ஒரு குழுவில் மூன்று தலைவர்கள் இருப்பர். ஒருவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டாலும், மற்ற இருவர் எங்களை வழிநடத்துவர்.
நான், ம.பி.,யில் வசிக்கிறேன். உ.பி., உள்ளிட்ட பல மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளேன். என் மீது, 45 வழக்குகள் உள்ளன. கடந்த, 2022 நவம்பரில் கைதாகி, உ.பி., மாநிலம், லக்னோ சிறையில் அடைக்கப்பட்டு, அதே ஆண்டில் ஜாமினில் வெளியே வந்தேன்.
அதிகாலையில் வயதான பெண்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், அவர்களை குறி வைத்தே செயின் பறிப்பில் ஈடுபட முடிவு செய்தோம். எங்களுக்கு விமானத்தில் தப்பிச் செல்லும் பழக்கம் இருப்பதால், செயின் பறிப்புக்கு ஏற்ற இடமாக, சென்னையை தேர்வு செய்தோம்.
நான் ஒருநாள் முன்னதாகவே சென்னைக்கு வந்து விட்டேன். சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி என, பல இடங்களுக்கு சென்று நோட்டமிட்டேன். அந்த இடங்களுக்கான, 'லொகேஷன்'களை, என்னுடன் கைதான, ஜாபர் குலாம் உசேன், மிசாம் அம்ஜித்துக்கும் அனுப்பினேன்.
செயின் பறிப்பில் ஈடுபடுவதற்காகவே, ஆறு மாதங்களுக்கு முன், 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தை வாங்கினோம். எங்கள் கொள்ளை கும்பலில், நகைகளை உருக்கி விற்பனை செய்ய, ஒரு குழு செயல்படுகிறது. அந்த குழுவிடம் ஒப்படைத்து விட்டால், நகையை எடை போட்டு உருக்குவதற்கு முன்னதாகவே, எங்களுக்கு பணத்தைக் கொடுத்து விடுவர். போலீசாரிடம் சிக்கிக் கொண்டால், எங்களை ஜாமினில் வெளியே எடுக்கவும் ஒரு குழு உள்ளது. அதில், வழக்கறிஞர்களும் உள்ளனர்.
ஒருமுறை கொள்ளையில் ஈடுபட, ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தால், 20 லட்சம் ரூபாய்க்கு நகை, பணம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். மிசாம் அம்ஜித்திற்கு, ஆறு மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது. கொள்ளையில் ஈடுபட செல்கிறோம் என்றதும், அவரின் மனைவி, உணவு தயாரித்து, 'டிபன் பாக்சில்' கொடுத்து அனுப்பினார்.
சுட்டுக் கொல்லப்பட்ட ஜாபர் குலாம் உசேன் மீது, பல மாநிலங்களில், 150 வழக்குகள் உள்ளன. அவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. ஜாபர், மிசாம் ஆகியோரின் மனைவியர் நெருங்கிய உறவினர். எங்களுக்காக மஹாராஷ்டிராவில், எம்.சி.ஓ.சி.ஏ., எனப்படும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டு சட்டம் இயற்றப்பட்டது. சில மாதங்களுக்கு முன்தான், இச்சட்டத்தில் ஜாபர் குலாம் உசேன் கைதாகி ஜாமினில் வெளியே வந்தார். அவரின் தந்தை குலாம் மீதும், 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன.
மிசாம் அம்ஜித் சகோதரர் அப்பாஸ், அவரின் தந்தை அம்ஜித் ஆகியோர், 2021 முதல் சிறையில் உள்ளனர். அவரின் ஐந்து மாமன்களும் சிறையில் தான் உள்ளனர். எங்கள் கொள்ளை கும்பலில் உள்ள தலைவர்கள் எல்லாரிடமும் துப்பாக்கி இருக்கும்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.