நாளை ஐபிஎல் போட்டி : நள்ளிரவு 1 மணி வரை இயக்கம்..!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காணச் செல்லும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன் வாயிலாக, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாளில், பயணிகளின் தேவையைப் பொருத்து, போட்டி முடிந்த பிறகு மெட்ரோ ரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணி வரை நீட்டிக்கப்படும். ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும் கடைசி மெட்ரோ ரயில் புறப்படும் நேரம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக அறிவிக்கப்படும்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் வர வேண்டும்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.