முதலீட்டாளர்களின் ரூ.8.8 லட்சம் கோடி இழப்பு..!

வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப்.28) பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 74.201.77 புள்ளிகளில் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியது முதலே குறியீட்டு எண்கள் வீழ்ச்சியை சந்தித்தன.
தொடர்ந்து இறங்கிய சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் 73.192 புள்ளிகளில் முடிந்தது. அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 418 புள்ளிகள் குறைந்து முடிவில் 22,126 ஆக வீழ்ச்சி கண்டது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரும்பாலான வர்த்தகத் துறைகள் கடும் இழப்பை சந்தித்துள்ளன. டெலிகாம், ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளின் பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தின.
இந்திய பங்குச்சந்தையின் இந்த வீழ்ச்சியால் மொத்தம், 8.8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் மாற்றம், அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய அறிவிப்புகள், பொருளாதார கொள்கைகள் ஆகியவையே பங்குச்சந்தையில் இன்றைய வீழ்ச்சிக்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.