கிடுக்குபிடி விசாரணை : அமீர் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்..!
2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் 9ம் தேதி போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன் பேரில், டெல்லியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அமீர் நேற்று காலை ஆஜரானார். அங்கு அவரிடம் இரவு 10.30 மணி வரை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.
அமீரிடம் விசாரணை நடைபெற்றபோது, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஜாபர் சாதிக்குடன் இருக்கும் தொடர்பு குறித்தும் அவரது பணப்பழக்கம் தொடர்பாகவும் அமீரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் இயக்குநர் அமீரின் வாக்குமூலத்தை எழுத்து பூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, அதிகாரிகள் அவர் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சுமார் 11 மணி நேர விசாரணைக்கு பின்னர் அமீரை அதிகாரிகள் விடுவித்தை அடுத்து அவர் சென்னை திரும்பியுள்ளார். இதற்கிடையே இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்ஸில், “அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை என்னை யாரும் அழைக்க வேண்டாம் “என பதிவிட்டுள்ளார்.