தலைக்கேறிய போதை..! போலீஸாரை தாக்கிய இளைஞர்கள்!
ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே உள்ள தனியார் பார் ஒன்றின் அருகே கடந்த 10-ம் தேதி இரவு இளைஞர்கள் சிலர் பிரச்சினை செய்து கொண்டிருந்ததாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு இளைஞர்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் இருவரும் பிரச்சினை செய்து கொண்டிருந்த இளைஞர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறியபோது, 9 பேர் கொண்ட கும்பல் போலீஸார் வைத்திருந்த லத்தியை பிடுங்கி அவர்களைச் சரமாரியாகத் தாக்கினர்.
தகவலறிந்து வந்த போலீஸார், காயமடைந்த தலைமை காவலர்கள் இருவரையும் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். காவலர்களைத் தாக்கிய ராஜபாளையம் கீழஆவாரம்பட்டி தெருவைச் சேர்ந்த பால்பாண்டி (31), கிளிராஜன் (24), பாஞ்சாலிராஜா(40), பாண்டியராஜ்(22), சரவண கார்த்திக்(33), முத்துராஜ்(32) ஆகிய 6 பேரை வடக்கு போலீஸார் கைது செய்தனர்.
மேலும், 3 பேரைப் போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். இந்நிலையில் நடு ரோட்டில் வைத்துப் போலீஸாரை இளைஞர்கள் லத்தியை பிடுங்கி சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.