திருவண்ணாமலையில் சர்வதேச அளவிலான ஹாக்கி ஸ்டேடியம்..!

திருவண்ணாமலை விழாவில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த விளையாட்டு வீரர் யுவராஜ் தடகள போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து சாதனை படைக்க வாழ்த்துகிறேன். முதலமைச்சரின் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாபெரும் இயக்கமாக மாறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தாண்டு 11லட்சம் பேர் முதலமைச்சரின் கோப்பை விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி வீரர்களுக்கு பரிசு வழங்குவதற்காக ₹37 கோடியை ஒதுக்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் 500 பேருக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் அரசு பணி ஆணை வழங்கப்பட உள்ளது. விளையாட்டு துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும். இந்தியாவிலேயே 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்றவை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. அதிகமாக வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலமாகவும், பெண்கள் அதிகளவு வேலைக்கு செல்லும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. 48 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்வதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது தமிழகத்திற்கு பெருமை. மேலும் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
திருவண்ணாமலையில் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் அமைக்கப்படும். யாரும் வீழ்த்த முடியாத தலைவராக விளங்கியவர் கலைஞர். அவரது பெயரில் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் 11.30 மணியளவில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துணை முதல்வர் ஆய்வு நடத்தினார். இதைதொடர்ந்து இன்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றார்.