1. Home
  2. தமிழ்நாடு

மத்திய இடைக்கால பட்ஜெட் : அரசியல் தலைவர்கள் கருத்து..!

1

மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அவர்  57 நிமிடங்கள் பட்ஜெட் உரையை முடித்தார்.

இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான துறைகள், கல்வி, சுகாதாரம், பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடுகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம், பிரதமர் கிராம சாலை திட்டம் உள்ளிட்ட அனைத்துக்குமான கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவாக செலவழித்துவிட்டு அதன் காரணமாகவே நிதி பற்றாக்குறை குறைந்திருப்பதை பெரும் சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

இதைப் போல அனைத்து மக்களுக்குமான மானியங்களாக வழங்கும் உர மானியம், உணவு மானியம், எரிபொருள் மானியங்களையும் வெட்டிச் சுருக்கியிருக்கிறார்கள். வேலையின்மை கடந்த அக்டோபர், டிசம்பர் மாதத்தில் 20-24 வயதுக்கு உட்பட்டவருக்கு 44.5 சதவிகிதமாகவும், 25-29 வயதுக்குட்பட்டவர்களுக்கு 14.33 சதவிகிதமாகவும் இருக்கும் நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்த திட்டமும் அறிவிப்பில் இல்லை. எந்த கணக்கீடும், தரவுகளுமின்றி 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டுவிட்டதாக பொய்யுரைத்திருக்கிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் மட்டும் மூன்றில் ஒருவர் கிராமப்புறத்தில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ. 26-ல் வாழ்க்கையை நடத்துவதற்கும், நகர்புறத்தில் ரூ. 32-ல் வாழ்க்கை நடத்துவதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில் இது எத்தனை மோசடி என்பது விளங்கும். இந்த நிலையிலும் வறுமை ஒழிப்புக்கு உருப்படியான எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் இருப்பதை மறைப்பதற்காகவே 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டு விட்டதாக அறிவித்துக் கொள்கிறார்கள்.

இந்தியா வரலாறு காணாத வளர்ச்சியடைந்து விட்டது போல வெற்று முழக்கங்களையும், வாய்ச்சவாடல்களையும் தவிர இடைக்கால பட்ஜெட்டில் எதுவும் இல்லை. கடந்த காலத்தைப் போலவே இது ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், விவசாயத்துக்கும், பெண்களுக்கும் எதிரான பட்ஜெட்டாகும். புதிதாக எந்த முன்வைப்புகளும், திட்டங்களும் இல்லாத நிலையில் கடந்த காலத்தைப் போலவே பெருமுதலாளிகளுக்கும், அந்நிய மூலதனங்களுக்கும் அள்ளிக் கொடுக்கும் கொள்கை தொடரும் என்பதே இதன் பொருள்.

மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் புதிய வரி விதிப்புக்கான வாய்ப்புகளும், மாநில அரசுகளிடமிருந்து ஜிஎஸ்டி வந்த பிறகு பறிக்கப்பட்ட நிலையில் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு வெறும் 20 சதவிகிதம் மட்டுமே. சரியாகச் சொல்வது என்றால் மத்திய அரசு தான் வாங்கியுள்ள கடனுக்கு கட்டும் வட்டி அளவுக்குத் தான் மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்கிறார்கள். 200 லட்சம் கோடிக்கு மேல் இந்தியாவில் கடன் உயர்ந்துள்ள நிலையிலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்த உருப்படியான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

இந்தியா முழுக்க சமூக நீதிக்கான குரல்களும், போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் தாங்களும் சமூக நீதிக்கு வாரி வழங்கியதைப் போல ஒரு பொய்யுரையை நிதியமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார். சமீபத்தில் கூட யுஜிசி, உயர்கல்வி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள பட்டியலினத்தவர், பழங்குடியினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடங்களை பொதுப் பணியிடங்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வந்ததும், இதற்கு முன்பும் இதுபோல நடந்ததும் அனைவருக்கும் தெரியும். இதேபோன்று, பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்று விட்டு, அரசு பணிகளுக்கும் ஆள் எடுக்காமல் இருக்கும் நிலையில் சமூக அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பகுதியினருக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்.

ஒட்டுமொத்தத்தில் ஏழை, எளிய, நடுத்தர, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மறுத்தும், அவர்களின் தலையில் சுமைகளை ஏற்றி, வாழ்வாதாரத்தை பறித்து வயிற்றில் அடித்துவிட்டு சாதனை பட்ஜெட் என்று தம்பட்டம் அடித்துள்ளனர். எனவே, வழக்கம் போல முழுமையான பட்ஜெட்டை போலவே இந்த பட்ஜெட்டும் இந்தியாவில் பெரும்பான்மை மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாகவும், பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் கொள்கைகளை உடையதாகவுமே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பாஜக அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கடந்த காலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை. மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஆட்சிக் காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலைக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை; எந்தப் பொருளுக்கும் வரிக் குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை; சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை. இப்படி 'இல்லை... இல்லை...' என்று சொல்வதற்காக எதற்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்? நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது 'இல்லா நிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணவில்லை. பணவீக்கம் குறையவில்லை. வறுமை ஒழிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதையெல்லாம் செய்து காட்டிவிட்டதாக பொய் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வழங்கிவிட்டதாகத் தங்களுக்கு தாங்களே தோளைத் தட்டிக் கொள்கிறார்கள்.

மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி சில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் திட்டத்தின் சூழ்ச்சியாக இக்குழு அமைக்கப்படுகிறதா எனச் சந்தேகம் ஏற்படுகிறது. மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளையில் மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய வரிகள் மீது கூடுதல்வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழகத்தில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழக மக்கள் இளித்தவாயர்களா? பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் புதிய திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு அண்மையில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதாகும்.

மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, 'தீவிர இயற்கைப் பேரிடர்' (Calamity of severe nature) ஆக அறிவிக்க வேண்டும் என்றும் இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். அது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 31 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டோம். அது குறித்தும் ஏதுமில்லை.

மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டுகாலமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் உண்மையில் நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்தாலும் மத்திய அரசின் பங்கு வெறும் 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா பற்றி குறிப்பிட்டது மட்டுமின்றி நாட்டில் தற்போது 80 கிராண்ட் மாஸ்டர் நிலை விளையாட்டு வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியைத் தமிழ்நாடு நடத்தியதை மத்திய நிதியமைச்சர் வசதியாக மறந்தது ஏன்?

இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 'ஏழைகள், மகளிர், இளைஞர்கள், உழவர்கள்' ஆகிய நான்கு பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றுகூறி, இந்த நான்கு பிரிவினர்களையும் நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்கள் ("four major castes") என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. ஒருநாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூகநீதிக்குப் புறம்பானது.

"சமூகநீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்" என சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையைச் சரிசம விகிதத்தில் 'பறிப்பதுதான்' பாஜக பின்பற்றும் சமூகநீதி ஆகும். சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பாஜக அடைந்திருப்பதைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும்; ஜூலை மாதம் நாங்கள்தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் சொல்லி இருப்பது உச்சகட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பாஜகவுக்கு வருகிற தேர்தலில் வழங்குவார்கள்.

2047-ஆம் ஆண்டு புதிய இந்தியாவைப் படைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு முதன்முதலாக நரேந்திர மோடி, பிரதமர் ஆனபோது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன்னார்கள். 500,1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றார்கள். 2019-ம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ஆம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை 'இண்டியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் . இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் "மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சியில் உலக அளவில் இந்தியா இன்று முதன்மை நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து, ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருப்பதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுவதும் நமது பிரதமரின் ஊழலற்ற நல்லாட்சிக்கான சாட்சி.

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என்று நான்கு ஜாதியினரையும் மேம்படுத்துவதில் மத்திய அரசின் முழுமையான அணுகுமுறையை இந்த இடைக்கால பட்ஜெட் உறுதிப்படுத்தி உள்ளது பிரதமரின் அன்ன யோஜனா போன்ற மக்கள் மேம்பாட்டு திட்டங்கள் நாட்டின் 80 கோடி மக்களுக்கு உணவளிப்பது மட்டுமில்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்க உதவியுள்ளது. 

வீட்டின் மேற்கூரைகளில் லேசர் தகடுகள் அமைப்பதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவசம் மின்சாரத்தை அறிவித்ததற்காக நமது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 11,11,111 கோடி நிதி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகளில் ரயில்வே விமான போக்குவரத்து கப்பல் போக்குவரத்து சுற்றுலா மற்றும் எரிசக்தி துறைகளில் பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பெரும்பங்கு வகிக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக தொழில்நுட்பத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூபாய் ஒரு லட்சம் கோடி நிதியானது தனியார் துறையில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஆதரிக்க வைப்பதாக அமையும் இது நமது ஆத்மனிபர் எனும் சுயசார்பு பாரதம் என்ற முன்னெடுப்பையும் பல மடங்கு ஊக்குவிப்பதாக அமையும்.

விக்சித் பாரத் திட்டத்தின் மூலம் புதிய சீர்திருத்தங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வசதியாக 50 ஆண்டுகால வட்டி இல்லா கடனாக 7500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் மேலும் 2019 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதியான ரூபாய் 11.45 லட்சம் கோடியிலிருந்து தற்போது 202425 ஆம் ஆண்டில் ரூபாய் 22.75 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதும் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதில் நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் நற்பணிப்புக்கான சான்று ஆகும் என்று தமிழக பாஜகவின் மாநில தலைவர் கே அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:- பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதும் இல்லை. ஒரு வெற்று அறிக்கை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்கிற இருக்கும் நிலையில், அவர்கள் ஏதேனும் புதிதாக அறிவிப்பார்கள், புதிய திட்டங்களை அறிவிப்பார்கள் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. அனைவரையுமே ஏமாற்றக்கூடிய வகையில் இது இருந்தது. பாஜகவினரையே அதிர்ச்சியடையக்கூடிய வகையில் ஒன்றுமில்லாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. பாஜக தடுமாறி போய் இருக்கிறது. தேர்தலை சந்திப்பதில் அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியிருப்பதை இது உணர்த்துகிறது.

Trending News

Latest News

You May Like