1. Home
 2. தமிழ்நாடு

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பார்லி.யில் தாக்கல்..!

1

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். 2-ம் நாளான நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  மத்திய இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நேற்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.  முன்னதாக, ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை நிமித்தமாக அவரது மாளிகையில் நேரில் வாழ்த்து பெற்றார். 

அவருடன் மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் பங்கஜ் செளத்ரி, பகவத் கிஷன்ராவ் கரத் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் சென்றனர். அதை தொடர்ந்து, பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர், பாராளுமன்ற மக்களவையில் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதன்படி, ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யும். கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டின் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமைக்குரிய இவர், இதுவரை 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இப்போது தொடர்ந்து 6-வது முறையாக நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்ட அவர், புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

மேலும், இறக்குமதி வரி உள்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 7 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடரும் என்றும். வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சில்லறை வணிகங்களுக்கான வரிவிதிப்பு வரம்பு ரூ. 2 கோடியில் இருந்து ரூ. 3 கோடியாக உயர்த்தப்படும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான வரி விகிதம் தற்போதுள்ள நிறுவனங்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்படுகிறது. சில புதிய உற்பத்தித் தொழில்களுக்கு 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020, மிகப் பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 54 இளைஞர்களுக்கு கூடுதல் பயிற்சி மற்றும் மறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 ஆயிரம் ஐடிஐ-க்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

உண்மையான சராசரி வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகள் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியின் வருடங்களாக இருக்கும். வரும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவின் கனவை நனவாக்கும் பொன்னான தருணங்களாக அவை இருக்கும். ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவவை, ஒவ்வொரு இந்தியரின் விருப்பத்தையும் நிறைவேற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் நிலைநிறுத்தும், உற்பத்தித்திறனை மேம்படுத்தும், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கும், திறன்களை மேம்படுத்த உதவும் பொருளாதாரக் கொள்கைகளை அரசு பின்பற்றும்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. வளர்ச்சியின் பயன்கள் ஏழை, எளிய மக்களை அடையத் தொடங்கியுள்ளன. எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் மீண்டும் வலுவான பெரும்பான்மையுடன் எங்களை ஆட்சியில் அமர்த்துவர்.

சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற கொள்கையால் அரசு வழிநடத்தப்படும். இந்தியாவின் வளர்ச்சிக்கு கிழக்குப் பகுதியையும் அதன் மக்களையும் உந்துசக்தியாக மாற்றுவதில் எங்கள் அரசு மிகுந்த கவனம் செலுத்தும். பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 3 கோடி வீடுகள் என்ற இலக்கை நெருங்கி வருகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும். நடுத்தர வர்க்கத்தவர்கள் சொந்த வீடுகளை வாங்க அல்லது கட்டுவதற்கு உதவும் வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தைத் தொடங்கும்.

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் 60 நகரங்களில் நடத்தப்பட்ட ஜி20 மாநாட்டின் வெற்றி இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. ஆன்மிக சுற்றுலாவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு வட்டியில்லா நீண்ட கால கடன் வழங்கப்படும். இதேபோல் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்காக மாநிலங்கள் சீர்திருத்தங்களை மேற்கொள்ள 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லா கடனாக ரூ. 75 ஆயிரம் கோடி வழங்கப்படும். நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் மத ரீதியிலான மாற்றம் குறித்து ஆய்வு செய்ய உயர் அதிகாரம் மிக்க ஆய்வுக் குழு உருவாக்கப்படும். 2014க்கு முந்திய சகாப்தத்தின் ஒவ்வொரு சவாலும் நமது பொருளாதார மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் மூலம் சமாளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டை உயர் வளர்ச்சியின் நிலையான பாதையில் கொண்டு சென்றுள்ளது. என்று கூறினார்.

மக்களவையில் 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அவர்  57 நிமிடங்களில் பட்ஜெட் உரையை முடித்தார். முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் உரை நேரங்கள் வருமாறு., 2019 - 20-ல் - 137 நிமிடங்கள், 2020 - 21-ல் 162 - நிமிடங்கள், 2021- 22-ல் 110 நிமிடங்கள், 2022-23-ல் 92 நிமிடங்கள், 2023 - 24-ல் 87 நிமிடங்கள், 2024 - 25 - 58 நிமிடங்கள் (இடைக்கால பட்ஜெட்).

 • அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகள் கட்டப்படும்
 • வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்.தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும்
 • உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்.
 • புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வருமானம் வரையில் விலக்கு அளிக்கப்படுகிறது
 • நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்கள் வாங்க உள்ளன.
 • 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்வு
 • விமான நிலையங்கள் இரு மடங்கு அதிகரிக்கப்பட்டு 149ஆக உயரும். 
 • மின்சார வாகன உற்பத்திக்கும், சார்ஜிங் மையங்கள் அமைக்கவும் ஊக்குவிக்கப்படும்
 • சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்
 • 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ தரத்தில் புதுப்பிக்கப்படும்!
 • பாதுகாப்புத்துறை நிதி  ரூ.11,11,111 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட சராசரியாக ரூ.5,17,573 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது.
 • கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
 • "மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ₹1.2 லட்சம் கோடி வழங்கப்படும்"
 • 2024-25ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1%-க்குள் கட்டுப்படுத்தப்படும்
 • நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் மேம்படுத்தப்படும்.
 • வெவ்வெறு பெயர்களில் செயல்படும் மகப்பேறு திட்டங்களை ஒரே திட்டமாக ஒருங்கிணைக்க முடிவு. அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களுக்கு மத்திய அரசின் மருத்துவ காப்பீடு வழங்கபடும்
 • மத்திய அரசின் திட்டங்களால் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக ஆகியுள்ளனர். பெண் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்த திட்டம்
 • கடந்த 10 ஆண்டுகளில் 7ஐஐடி, 7ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் சராசரி வருவாய் 50% வரை உயர்ந்துள்ளது.
 • 1 கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதன் மூலம் வீடு ஒன்றிற்கு தலா 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும்
 • சாதி, மத வேறுபாடுகள் இன்றி, திட்டங்களின் பயன்கள் அனைவரையும் நேரடியாக சென்றடைகின்றன.யாருக்கு என்ன தேவை என்ன என்பதை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர்
 • 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி நேரடி மானியம்
 • விவசாயிகள், ஏழைகள் என மக்கள் நலத் திட்டங்கள் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி மானியம் சென்றடைந்துள்ளது
 • 10 ஆண்டுகளில் 7 ஐஐடி.கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன
 • 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
 • ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு நாங்கள் மிக உயரிய முன்னுரிமை அளித்து வருகிறோம்
 • MSP தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது
 • குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிட்ட கால அவகாசத்தில் உரிய முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது
 • 10 ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது
 • 4 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது
 • மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது
 • பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28% அதிகரிப்பு.பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை சட்டங்களால் மகளிர் பயன் அடைந்துள்ளனர்
 • பிரதமரின் கிசான் திட்டத்தால் 11.8 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்
 • கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் புதிதாக 3000 ஐடிஐ-களை ஏற்படுத்தியுள்ளோம்
 • கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் உண்மையான சராசரி வருவாய் அதிகரித்துள்ளது
 • ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் மூலம் வரி அடிப்படையிலான வளர்ச்சி மேம்படுத்தப்பட்டுள்ளது
 • 1 கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள்
 • ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமல்படுத்தப்படும். சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சார வழங்கப்படும் 

Trending News

Latest News

You May Like