இன்ஸ்டாகிராம் நட்பு... காதலிக்க மறுத்ததால் பாழுங்கிணற்றில் 3 நாட்கள் தவித்த இளம் பெண் !

இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளைஞரை நம்பி சென்றதால் அவர் தனது வேலையை காட்ட மூன்று நாட்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தவித்துள்ளார் இந்த இளம்பெண்.
கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் மாலூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் சமூகவலைதளங்களில் மூழ்கி கிடந்துள்ளார். அப்போது, ஆதர்ஷ்( 22) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் அறிமுகமாகியுள்ளார்.
அறிமுகமான ஒரே மாதத்தில் இருவரும் தொலைப்பேசியில் பேசி நெருக்கமாயினர். பின்னர் இருவரும் நேரில் சந்திக்கலாம் என முடிவெடுத்தனர். அதன்படி ஆதர்ஷின் அழைப்பை ஏற்ற அந்த பெண் அவரை சந்திக்க பெங்களூரு அருகிலுள்ள தேவனஹள்ளிக்கு பேருந்தில் சென்றார்.
பின்னர் தேவனஹள்ளியில் இருந்து இளம்பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு அழைத்துச்சென்றார் ஆதர்ஷ். பண்ணை வீட்டிற்கு சென்றபின் ஆதர்ஷ் - இளம்பெண் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆதர்ஷ் விருப்பம் தெரிவித்தார், ஆனால் அப்பெண் திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் இல்லை, நண்பர்கள் தான் என கூறியுள்ளார். எவ்வளவு வற்புறுத்தியும் அப்பெண் கேட்காததால் ஆத்திரம் அடைந்த ஆதர்ஷ் அந்தப் பெண்ணை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அப்போது இரவு 8 மணி என்பதால் அங்கு வேறு யாரும் இல்லை. இதனால் அப்பெண் எவ்வளவு சத்தம்போட்டும் அங்கு யாரும் வரவில்லை. அவர் கிணற்றுக்குள் தள்ளப்பட்ட மூன்று நாட்களுக்கு பின் கிணற்றில் இருந்து அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பிறகு ஒரு கிரேன் வந்து அந்த பெண்ணை கிணற்றிலிருந்து மீட்டது. பிறகு அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அப்பெண் அளித்த புகாரின் பேரில் ஆதர்ஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
newstm.in