1. Home
  2. தமிழ்நாடு

30 சதவீதம் வியாபாரம் அதிகரித்தால் விசாரணை நடத்த முடிவு..?

1

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதை தொடர்ந்து, வாகனங்களில் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள், ரொக்க பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கூட்டங்களையும், தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளின் விற்பனையைக் கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மொத்தமாக மதுபானங்களை விற்கக் கூடாது என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக மதுபானங்கள் விற்பனையானால், அந்தக் கடைகளில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் விற்பனை செய்யப்பட்ட மதுபான வகைகள், தொகை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு, இரவில் கடை மூடப்பட்ட பிறகு அனுப்பி வந்தோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மண்டல மேலாளர் அலுவலகத்துக்கும் ஆன்லைன் மூலம் அனுப்பி வருகிறோம். அதில், 52 வகையான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் மதுபானமும், கடந்த ஆண்டு அதே நாளில் விற்பனை செய்யப்பட்ட மதுபான அளவும் ஒப்பிடப்படுகிறது. அதில், 30 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு இருந்தால் எந்தப்பிரச்னையும் இல்லை. அதற்கும் கூடுதலான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் பணியாளரிடம் மண்டல மேலாளர் அலுவலகத்தில் இருந்து விசாரணை நடத்தப்படும். அந்தப் பகுதியில் திருவிழா, முகூர்த்தநாள் போன்றவை இருந்தால் பிரச்னை இல்லை. சந்தேகம் ஏற்பட்டால், கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்கின்றனர். இது தவிர, தேர்தல் பறக்கும்படையினரும் அவ்வப்போது கடைக்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவோர் மதுபானங்களை மொத்தமாக வாங்கி, விநியோகம் செய்வதை தடுக்கவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் இதுபோன்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது என்றனர்.

Trending News

Latest News

You May Like