இனி தேசிய திரைப்பட விருதுகளில் இந்திரா காந்தி, நர்கீஸ் தத் பெயர்களில் இல்லை..!
ஆண்டுதோறும் ஏராளமான விருதுகளை இந்திய அரசு வழங்கி வருகிறது.மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய திரைப்பட விருதுகள்' வழங்கப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளன. அதற்கான திரைப்படங்களை சமர்ப்பிக்கும் பணி ஜனவரி 30-ந் தேதியுடன் நிறைவடைந்தது.பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் தேசிய விருதுகள் மற்றும் அதற்கான பரிசுத்தொகை ஆகியவை சீரமைக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிட்டியின் பரிந்துரைப்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள 70வது தேசிய திரைப்பட விருதுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி , ‘சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது’ என்ற பெயரில் இருந்த பிரிவு, ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது’ என்று மாற்றப்பட்டுள்ளது. அதே போல ‘தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்துக்கான நர்கீஸ் தத் விருது’ என்ற பிரிவு, ‘தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது’ பெறும் இயக்குநருக்கு பதக்கமும், ரூ.3 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். ‘தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ விருது பெறும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு பதக்கமும், தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். மேலும், இந்திய திரைத் துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதாசாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.