இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து... பயணிகள் அவதி!
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் மட்டும் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் 172, மும்பையில் 118, பெங்களூருவில் 100, ஐதராபாதில் 75, கொல்கத்தாவில் 35, சென்னையில் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பரபரப்பான சூழ்நிலையை எதிர்கொண்டனர்.
விமானிகளைச் சேர்த்து தேவையான விமான பணியாளர்கள் குறைவாக இருப்பது மற்றும் அட்டவணை மாற்றங்களில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இண்டிகோ செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நீண்ட நேரம் விமான நிலையங்களில் காத்திருந்த பயணிகள், நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, விமான ரத்தாக்கத்தை குறைக்க உரிய செயல்திட்டத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இண்டிகோ நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இண்டிகோ சேவை நான்காவது நாளாகவும் சரியாக இயங்காத நிலையில், இன்று மட்டும் நாடு முழுவதும் மேலும் 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 62 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாலை 6 மணி வரை சென்னையிலிருந்து, நள்ளிரவு 12 மணி வரை டெல்லியில் இருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு, ஆட்கள் பற்றாக்குறை மற்றும் திட்டமிடல் பிழைகள் இந்த பெரும் தடங்கலுக்கு காரணமாக கூறப்படுகிறது.