இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம் : விலை குறைய போகும் பொருட்கள் என்னென்ன..?
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக லண்டன் சென்றுள்ளார் . லண்டன் வந்தடைந்த அவரை, இங்கிலாந்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர், இரு நாடுகளின் பிரதமர்கள் முன்னிலையில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டன் அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஃப் டி ஏ என அழைக்கப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தோல், காலணிகள், ஜவுளிகள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி பிரிட்டனில் குறைக்கப்படும். மறுபுறம், பிரிட்டனில் இருந்து ஏற்றுமதியாகும் விஸ்கி, ஜின், குளிர்பானங்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்களின் மீதான வரியும் குறைக்கப்படும். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை எளிமைப்படுத்த மின்னணு முறையில் காகிதப் பயன்பாடு இல்லாத வர்த்தகத்திற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்படும்?
- இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு இறக்குமதி வரி பிரிட்டனில் 8 முதல் 12 சதவீதமாக உள்ளது. இதனை பிரிட்டன் அரசு நீக்க முன்வந்துள்ளது. இதனால் திருப்பூர், சூரத் மற்றும் லூதியானாவில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பயன் அடைவர்கள்.
- இந்தியாவில் இருந்து வரும் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு வரி குறைக்கப்படும்.
- இதே போல், பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் விஸ்கிகளுக்கான வரியை 150-ல் இருந்து 30 சதவீதமாக குறைக்க இந்தியா முன் வந்துள்ளது. இதனால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் விஸ்கிகளின் விலை குறையும்.
- இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கான வரியை பிரிட்டன் குறைக்கிறது. இதனால் சென்னை, புனே மற்றும் குருகிராம் உள்ளிட்ட பகுதிகள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளையும் பிரிட்டன் எளிமையாக்கியுள்ளது. இதனால் இங்கிருந்து பொறியாளர்கள், ஆடிட்டர்கள் உள்ளிட்டோர் பிரிட்டன் செல்வதில் சிரமங்கள் இருக்காது.
- இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு வரிச்சலுகை அளிக்க பிரிட்டன் முன் வந்துள்ளது.
- பாசுமதி அரிசி, தேயிலை மற்றும் நறுமண மசாலாப் பொருட்களின் இறக்குமதி வரியையும் பிரிட்டன் குறைக்கவுள்ளது. இதனால், கேரளா, தமிழ்நாடு, அசாம், குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநில விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் பயனடைவர்கள்.
- ரசாயனப் பொருட்களுக்கும், பிளாஸ்டிக் பொருட்களுக்கும் பிரிட்டன் வரியை குறைப்பதால் குஜராத் மற்றும் மகாராஷ்டிர ஏற்றுமதியாளர்கள் பயன் அடைவர்.
- இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளான சூரியஒளி மின்சாரத் திட்டங்கள், ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிப்புகளில் அதிக முதலீடுகள் செய்ய பிரிட்டன் முன் வந்துள்ளது.
- இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன்கள், ஆப்டிகல் பைபர் கேபிள்கள், இன்வெர்டெர்கள் உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களுக்கு பிரிட்டன் வரிகளை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இதனால், இந்தியாவில் இந்த தொழிலில் இருப்பவர்கள் பயன் அடைவார்கள்.\
- பொருட்களின் மீதான வரி மட்டுமல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த யோகா பயிற்றுநர்கள், சமையல்காரர்கள் மற்றும் இசைக் கலைஞர்களுக்கும் பிரிட்டனில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
முன்னதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது இந்தியா - பிரிட்டன் இடையேயான உறவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் பன்மடங்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், "இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒத்துழைப்பு, முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்தும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா, பிரிட்டன் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.