1. Home
  2. தமிழ்நாடு

நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் துவக்கப்பட்ட நடமாடும் இ-சேவை கேந்திரா மையம்..!

1

நடமாடும் இ - சேவை கேந்திரா என்ற சேவை மையம், நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் துவக்கப்பட்டது.

நீதிமன்ற சேவைகள் அனைவருக்கும் சென்று சேரும்படியும், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் நடமாடும் இ - சேவை கேந்திரா துவங்கப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தியிருந்தார்.இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்கள், மாநிலத்தில் ஏதாவது ஒரு மாவட்ட நீதிமன்றம் ஆகிய இடங்களில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் இ - சேவை கேந்திரா துவங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

நடமாடும் நீதிமன்றங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில், நீதிமன்றம் தொடர்பான அனைத்து உதவி மற்றும் சேவைகளை ஓரிடத்தில் பெறும் வகையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நடமாடும் இ - சேவா கேந்திரா வாகனத்தின் பயன்பாடு சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.ஜே.தேசாய் முன்னிலையில், நீதிபதி ஏ.முஹமது முஸ்தக் அதை துவக்கி வைத்தார்.

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட நடமாடும் மினி பஸ்சில், இணையதள வசதிகளுடன் இரண்டு கம்ப்யூட்டர்கள், ஒரு பிரின்டர் மற்றும் தேவையான தொழில்நுட்ப வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்பம் குறித்து அறிமுகம் இல்லாதவர்கள், எளிய முறையில் நீதித் துறையை அணுகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, இந்த வாகனம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சென்று தன் சேவையை வழங்கும்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இடுக்கி மாவட்டத்தில் அவர்களின் தேவையை கருத்தில் வைத்து இந்த நடமாடும் இ - சேவா கேந்திரா துவங்கப்பட்டு உள்ளது. கணினி வசதிகள் அல்லது போக்குவரத்து பயன்பாடுகள் இல்லாத தொலைதுார பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மக்கள், நீதி அமைப்புக்கான அணுகலை எளிய முறையில் பெற உதவு வதை இ - சேவா கேந்திரா நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த நடமாடும் இ - சேவை மையத்தை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

வழக்கு தொடுப்பவர்கள் மின்னஞ்சல் வாயிலாக வழக்கை பதிவு செய்யவும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை வழக்கறிஞர்கள் தெரிந்து கொள்ளவும், நடமாடும் இ - சேவா மையம் உதவியாக இருக்கும்.

வழக்கறிஞர்கள் வழக்கின் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளின் நகல்களைப் பெறுவதற்கும் இந்த நடமாடும் இ - சேவா மையம் உதவுகிறது.

வழக்கின் நிலை, அடுத்த விசாரணைக்கான தேதி குறித்தும் இதன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

வழக்கு தொடர்பான மனுக்களில் இ - கையொப்பங்களை இணைத்தல், பதிவேற்றம் செய்தல், தாக்கல் எண் வழங்குதல் போன்ற சேவைகளும் இதில் அடங்கும்.

சிறையில் உள்ளவர்களை அவர்களது உறவினர்கள் சந்திக்க, முன்பதிவு மனுவை தாக்கல் செய்தல், மாவட்ட சேவை ஆணையம், உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற சட்ட சேவைக் குழு ஆகியவற்றில் இருந்து இலவச சட்ட சேவைகள் பெறுவது குறித்த விபரங்களும், இந்த நடமாடும் இ - சேவா வாகனம் வாயிலாக வழங்கப்பட உள்ளன.

Trending News

Latest News

You May Like