1. Home
  2. தமிழ்நாடு

இந்திய நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தேர்வு..!

1

பெங்களூருவைச் சேர்ந்த 14 வயதான இந்திய நீச்சல் வீராங்கனை தினிதி தேசிங்கு ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மொத்தம் 111 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் மிக இளம் வயது வீராங்கனையாக தினிதி அறியப்படுகிறார். கடந்த 2022 ஆசிய போட்டிகளிலும் இவர் பங்கேற்று இருந்தார். 200 மீட்டர் ஃப்ரிஸ்டைல் பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்க உள்ளார்.

தொழில்முறை நீச்சல் பயிற்சியை கடந்த 2018-ல் அவர் தொடங்கியுள்ளார். சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் அளவில் பதக்கங்களை வென்றுள்ளார். கோவாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் 7 தங்கப் பதக்கம் வென்றார். அதன் மூலம் லைம்லைட்டுக்குள் வந்தார். அதோடு தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றார்.

தற்போது யுனிவர்சாலிட்டி முறையில் இந்தியா சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். வேர்ல்ட் அக்வாட்டிக் புள்ளிகளில் 749 புள்ளிகளுடன் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனை என்ற முறையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.

“பொழுதுபோக்கு சார்ந்து என் வயது பிள்ளைகள் அனுபவிக்கும் சிலவற்றை என்னால் பெற முடியாது. நான் நண்பர்களுடன் அதிகம் வெளியில் செல்ல மாட்டேன். வீட்டில் தனிமையை உணர்ந்தது உண்டு. அப்போதுதான் நீச்சல் பழக ஆரம்பித்தேன். அதில் ஆர்வம் அதிகரித்தது. தீவிரமாக பயிற்சி செய்தேன். இப்போது ஒலிம்பிக் வரை வந்துள்ளேன்.

எனக்கான இந்த பாதையை தேர்வு செய்தது நான் தான். இதற்காக நிறைய தியாகம் செய்துள்ளேன். ஆனால், எனக்கு இது பெருமை அளிக்கிறது. 14 வயதில் ஒலிம்பிக் செல்கிறேன். அந்த வகையில் என் அர்ப்பணிப்பு அனைத்தும் மதிப்புமிக்கது என கருதுகிறேன்.

ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான தகுதியை நான் பெறுவேன் என எண்ணினேன். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். இருந்தாலும் இளம் வயதில் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது சர்ப்ரைஸ் அளிக்கிறது. இந்திய அணியின் இளம் வீராங்கனை என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தை நான் பெற்றுள்ளேன். இந்திய அணியுடன் பயணிக்க ஆர்வமாக உள்ளேன். மேலும், சிறந்த தடகள வீரர்களை சந்திக்கும் வாய்ப்பாகவும் இதனை பார்க்கிறேன்.

இது எனக்கு ஆரம்பம் தான் என நினைக்கிறேன். வரும் 2028 மற்றும் 2032 ஒலிம்பிக்கை எண்ணி உற்சாகம் கொள்கிறேன். ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி அந்த அனுபவத்தை உணர விரும்புகிறேன். இந்தியாவில் நடைபெறும் போட்டிகளும், அங்கு நடைபெறும் சர்வதேச தரத்திலான போட்டிகளும் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். தடகள வீரர்களின் பல்வேறு செயல்பாடுகளை நான் கவனிக்க விரும்புகிறேன். அது அவர்களது தயாரிப்பு முதல் அர்ப்பணிப்பு வரையிலானதாக இருக்கும்.

இந்த முறை எனது செயல்பாட்டை காட்டிலும் நான் என்ன கற்றுக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம். நிச்சயம் இது சிறந்த தடகள வீராங்கனையாக உருவாகும்” என தினிதி தேசிங்கு தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் ஏழு முறை தங்கம் வென்ற கேத்லீன் ஜெனிவிவ் லெடெக்கியை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் சொல்லியுள்ளார்.

Trending News

Latest News

You May Like