இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் 2 போட்டிகளில் விளையாட தடை..?

வங்கதேச மற்றும் இந்திய மகளிருக்கு இடையிலான 3வது ஒருநாள் ஆட்டம் மிர்பூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்ததால், தொடரானது 1-1 என சமநிலையில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் ஸ்லிப்பில் கேட்ச் ஆனதற்கு நடுவர் தன்வீர் அஹமது அவுட் கொடுத்தார்.
நடுவரின் முடிவால் கோபமடைந்த ஹர்மன்பிரீத் கவுர், தனது கையில் இருந்த பேட்டால் ஸ்டம்ப்ஸ்களை வேகமாக அடித்து தள்ளிவிட்டு, திட்டிகொண்டே சென்றார். மேலும், ஆட்டம் முடிந்தவுடன் பரிசளிப்பு விழாவில் நடுவர்களின் முடிவை பகிரங்கமாக கிண்டல் செய்தார்.
இதன் காரணமாக, ஹர்மன்பிரீத் கவுருக்கு 3 அபராதப் புள்ளிகளும், ஆட்ட நடுவர்களை பொது இடத்தில் விமர்சித்ததற்காக ஒரு அபராதப் புள்ளியும் வழங்க ஆட்ட நடுவர் அக்தர் அஹமது பரிந்துரை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த இறுதி முடிவை ஐசிசி எடுக்கவுள்ளது. இந்த விவகாரம் பற்றி ஐசிசியிடம் பேச்சுவார்த்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி விதிகளின்படி, ஒரு வீரர் இரண்டு ஆண்டுகளுக்குள் 4 அபராதப் புள்ளிகளைப் பெற்றால், அது இடைநீக்கப் புள்ளிகளாக மாறிவிடும். நான்கிலிருந்து 7 அபராதப் புள்ளிகள் என்பது இரண்டு இடைநீக்கப் புள்ளிகளுக்குச் சமம். அதாவது ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது 2 டி20 ஆட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும். இதில் எது முதலில் வருகிறதோ அதற்குத் தடை பொருந்தும்.
இந்திய மகளிர் அணி தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் அடுத்த போட்டியில் விளையாட உள்ளதால், ஹர்மன்பிரீத் 2 போட்டிகளில் விளையாடாமல் இருக்க வாய்ப்புள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியின் போது ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு டிமெரிட் புள்ளிகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.