இந்திய கேப்டனுக்கு சர்வதேச விருது..!

மர்லின் லுவாண்டா என்ற வணிக கப்பலின் கேப்டனாக அவிலாஷ் ராவத் பணியாற்றி வந்தார்.இந்த கப்பல், ஜனவரி மாதம் 84 ஆயிரம் டன் நாப்தா பாரம் ஏற்றிக்கொண்டு செங்கடல் வழியாக சென்றபோது, பயங்கரவாதிகளால் கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் கப்பலின் சரக்கு இருப்பு பகுதியில் தீப்பற்றிக் கொண்டது.
தீயை அணைக்கவும், கப்பலை காப்பாற்றவும், அவிலாஷ் ராவத் தலைமையிலான கப்பல் பணியாளர்கள், நான்கரை மணி நேரம் கடலில் போராடினர். அதன்பிறகே, அவர்களுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் கடற்படை கப்பல் உதவி கிடைத்தது.
உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும், கப்பலை காப்பாற்ற போராடிய குழுவினரை கவுரவிக்கும் நோக்கில் அசாதாரண துணிச்சலுக்கான விருதை அவிலாஷ் ராவத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த கப்பலின் பாதுகாப்புக்காக விரைந்து செயல்பட்ட இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் குழுவின் கேப்டன் பிரிஜேஷ் நம்பியார் உள்ளிட்டோருக்கும் பாராட்டுச்சான்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அவிலாஷ் ராவத், ஆபத்தில் உதவிய இந்தியா, பிரான்ஸ், அமெரிக்க கடற்படைகளுக்கு நன்றி தெரிவித்தார். செங்கடல் வழியாக கப்பல் அனுப்புவதை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.