இந்திய ராணுவம் வீரர்களுக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்..!
செப்டம்பர் 14 அன்று புவனேஸ்வரில், ராணுவ அதிகாரி மற்றும் அவரது வருங்கால மனைவி ஆகியோர் போலீஸாரால் தாக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் ராணுவத்தினருக்கும், ஒடிசா போலீசாருக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது. ராணுவ வீரர் என்று தெரிந்தும், போலீசார் அவரைக் கையாண்ட விதம்குறித்து சர்ச்சைகள் கிளம்பின.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் வீரர்களுக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.ராணுவ வீரர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில், 155306 என்ற எண்ணில் ஹெல்ப்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஹெல்ப்லைன் வசதிகுறித்து ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ள, இந்த ஹெல்ப்லைனில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் பணியாற்றுவார்கள். அழைப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, அதன் மீது உடனடி நடவடிக்கைகள் எடுப்பது உறுதி செய்யப்படும்.
அழைப்பாளர்கள் தங்கள் சேவை விவரங்கள் மற்றும் சம்பவத்தின் சுருக்கமான விளக்கத்தை வழங்க வேண்டும். ஹெல்ப்லைன் என்பது நிலத் தகராறுகள் மற்றும் திருமண மோதல்கள் போன்ற சிக்கல்களைத் தவிர்த்து, அவசரகால சூழ்நிலைகளுக்குகென வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராணுவ உறுப்பினர்கள்மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்குறித்த கவலைகளுக்கு மத்தியில் தனது பணியாளர்களுக்கு ஆதரவையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான ராணுவத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.