இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஜாகிர் நாயக்கிற்கு பாகிஸ்தான் அளித்த வரவேற்பு - இந்தியா கண்டனம்..!

இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு குண்டு வெடிப்பை நடத்தியதாக ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாகிர் நாயக் மீதான பயங்கரவாதத்துக்கு ஆள் திரட்டியது, நிதி வழங்கியது தொடர்பான வழக்குகளை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. நம் நாட்டை விட்டு தப்பியோடியதால், ஜாகிர் நாயக்கை தப்பியோடிய நபராக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், கடந்த 18 ம் தேதி பாகிஸ்தான் சென்ற ஜாகிர் நாயக், அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் மரியம் நவாசை சந்தித்து பேசினார். லாகூரின் ரைவிண்டி நகரில் உள்ள நவாஸ் குடும்பத்திற்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த இந்த சந்திப்பின் போது இரு தரப்பும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். ஆனால், என்ன விஷயம் குறித்து பேசப்பட்டது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதனை பாகிஸ்தானை சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து,மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தானில் ஜாகிர் நாயக்கிற்கு விருந்தோம்பல் அளிக்கப்படுவது இது முதல் முறை கிடையாது. இந்தியாவில் தேடப்படும் ஒரு நபருக்கு இவ்வளவு ஆதரவு வழங்குவதன் அர்த்தம் என்ன என்பதையும் நமக்கு காட்டுகிறது என்றார்.
முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீசும் ஜாகிர் நாயக்கை சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், கடுமையாக அவரை விமர்சித்தனர்.