1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்க இந்தியா தயக்கம்..?

1

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

ஜூனில் தொடங்கிய அந்தப் போராட்டம் கடந்த மாதம் நாடு முழுவதும் பெரும் கலவரமாக மாறியது. இதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இட ஒதுக்கீட்டில் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் போராட்டம் நடத்திய மாணவர்களில் 11 ஆயிரம் பேர் விடுதலை செய்யப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் தலைநகர் டாக்காவில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு பேரணி நடத்தினார்கள்.

இதனால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு ஹெலிகாப்டர்மூலம் தனது தங்கையுடன் டெல்லிக்கு தப்பி வந்தார். டெல்லி அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது வீட்டுக்கு இந்திய விமானப்படையின் கருடா பிரிவு வீரர்கள் பலத்த பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தற்காலிகமாகத் தங்கியிருக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர் முதலில் லண்டனில் தஞ்சம் அடைய திட்டமிட்டார். ஆனால் இங்கிலாந்து அரசு அதில் உள்ள சட்டசிக்கல்களை சுட்டிக் காட்டியதால் அந்தத் திட்டத்தை அவர் கைவிட்டார்.

பிறகு அமெரிக்கா செல்லலாம் என்று நினைத்தார். ஆனால் அமெரிக்கா அவரது விசாவை அதிரடியாக ரத்து செய்தது. இதனால் அங்கும் அவரால் செல்ல இயலவில்லை.

இந்த நிலையில் ஷேக் ஹசீனா வேறு நாட்டில் தஞ்சம் அடைய முடிவு செய்துள்ளார். வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் அவரது உறவினர்கள் பலர் உள்ளனர். எனவே அங்குச் செல்வது பற்றி அவர் ஆலோசித்து வருகிறார்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகம், பெலாரஸ், கத்தார், சவுதி அரேபியா, பெல்ஜியம் ஆகிய 5 நாடுகளிடமும் ஷேக் ஹசீனா அடைக்கலம் கேட்டு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. தற்போது ஷேக் ஹசீனா மிகவும் குழப்பமான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவர் எந்த நாட்டுக்கு எப்போது புறப்பட்டுச் செல்வார் என்பது மர்மமாக உள்ளது.

இதையடுத்து ஷேக் ஹசீனா மேலும் 2 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் எந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்ல விரும்புகிறாரோ அதற்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஷேக் ஹசீனா இந்தியாவில் நிரந்தரமாகத் தஞ்சம் அடைந்து தங்கியிருக்க விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக ஷேக் ஹசீனா வெளிநாடு செல்லும் விவகாரத்தில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது.

இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் மகன் அளித்த பேட்டியில், “எனது தாய் எந்த நாட்டிடமும் தஞ்சம் அடைய இதுவரை அனுமதி கேட்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை” என்று கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் ஷேக் ஹசீனா இந்தியாவில் நிரந்தரமாகத் தங்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like