1. Home
  2. தமிழ்நாடு

நிலவில் கால்பதித்து வரலாறு படைத்த இந்தியா..!

1

இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட அவ்விண்கலத்தின் விக்ரம் இறங்குகலம் (லேண்டர்) இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 6.04 மணிக்கு நிலவில் கால்பதித்தது.

இதற்குமுன் எந்த ஒரு நாடும் நிலவின் தென்துருவப் பகுதிக்கு விண்கலம் அனுப்பியதில்லை.இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலத்தை நிலவில் தரையிறக்கும் முயற்சி, கடைசி நேரத்தில் கைகூடாமல் போனது.

அதனையடுத்து, பல்வேறு மாற்றங்களுடன் கூடிய சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டு, இலகு ரக ‘எம்எல்வி-3’ உந்துகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இம்மாதம் 17ஆம் தேதி விண்கலத்தின் சுற்றுகலத்தில் (ஆர்பிட்டர்) இருந்து விக்ரம் இறங்குகலம் விடுவிக்கப்பட்டது.இறுதியாக, குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும் அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் இறங்குகலம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் நிலவின் தரைப்பகுதியிலிருந்து 150 மீட்டர் உயரத்திற்குக் கொண்டுவரப்பட்ட இறங்குகலம், அந்நிலையிலேயே சில நொடிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.அதன்பின் உணர்கருவிகள் மூலம் தரையிறங்கத் தோதான, சமதளமான பரப்பு தேர்வுசெய்யப்பட்டது.

இறங்குகலத்தின் வேகம் பூஜ்ஜியமானதும் அதனை மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழக (இஸ்ரோ) அறிவியல் வல்லுநர்கள் இறங்கினர். அதில் அவர்கள் வெற்றியும் பெற்று புதிய சாதனை படைத்தனர்.

தங்களின் கனவு நனவானதும் அவர்கள் உற்சாகக் குரல் எழுப்பியும் ஒருவரையொருவர் ஆரத் தழுவியும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

இதனையடுத்து, “ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் கிடைத்த வெற்றி; நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் அடுத்தகட்டத் திட்டம். இஸ்ரோ மாபெரும் வரலாறு படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும்,” என்று தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like