இந்தியா தற்போது நல்ல வளர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது: பில்கேட்ஸ் புகழாரம்..!
சியாட்டில் நகரில் உள்ள இந்திய தூதகரகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பில்கேட்ஸ் பங்கேற்றார். வாஷிங்டன் கவர்னர் டென்னிஹேக், வாஷிங்டன் நகர செயலர், வாஷிங்டன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஸ்டீவ்கன்சலேஸ், அமெரிக்க எம்பி.,க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
விழாவில் தேசிய கொடியை ஏற்றி பில்கேட்ஸ் பேசியதாவது:
இந்தியா தற்போது நல்ல வளர்ச்சி அடைந்து வருவதை காண முடிகிறது. இந்தியர்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக வளர்ச்சியிலும் பங்கெடுக்கின்றனர். தொழில் நுட்பம் , வேளாண், சுகாதார துறைகளில் புதிய கண்டுபிடிப்பு, யுக்திகளை கொண்டு இந்தியா ஒரு உலக தலைவனாக திகழ்கிறது.
டிஜிட்டல் துறையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதை காண முடிகிறது. உலகின் தென்பகுதியில் இந்திய அனுபவங்களை பல நாடுகள் பின்பற்றுகிறது. குறைந்த விலையில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா தலைமையிடத்தை பெறுகிறது. இவ்வாறு பில்கேட்ஸ் பேசினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பெரும் கட்டடங்களில் தேசிய கொடி மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.விழாவில் பங்கேற்ற பில்கேட்சுக்கு, அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.