இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்று முடிந்து அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின, இதில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சிறிது நேரத்தில் ரிஷப் பண்ட்டும் 4 ரன்னில் வெளியேறினார்.
இக்கட்டான நிலையில் ரோகித்துடன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நடுவே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, அரைசதம் அடித்த நிலையில், 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்த களமிறங்கிய ஹர்திக் 23 ரன்களும், சிவம் துபே (0), அக்சர் படேல் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 17 ரன்களுடனும், அர்ஸ்தீப் சிங் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக ஜாஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் களமிறங்கினர். ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சிறிது நேரத்தில் சால்ட்டும் (5) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசினர். இதன் காரணமாக மொயீன் அலி (8), பேர்ஸ்டோவ் (0), சாம் கரன் (2) ஹாரி புரூக் (25) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். லிவிங்ஸ்டன் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டது.