1. Home
  2. தமிழ்நாடு

5-வது முறையாக சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்..!

1

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் முதல் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2-ஆவது அரையிறுதியில் தென்கொரியா அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், இன்று இந்திய நேரப்படி 3.30 மணி அளவில் இந்தப் போட்டியானது தொடங்கியது. கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் வரை இரண்டு அணிகள் தரப்பிலிருந்தும் யாரும் கோல் அடிக்காத சூழலே நிலவியது. அந்த அளவுக்கு இரண்டு அணிகளும் கடுமையான போட்டி போட்டு விளையாடினர். சரியாக 51-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜுக்ராஜ் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து சீனா கோல் அடிக்க போராடியும் முடியாமல் போனது. இந்நிலையில், 1-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக, ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் 2011, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி கோப்பை வென்றது. அந்த வகையில் தற்போது சீனாவை வீழ்த்தி 5-ஆவது கோப்பையை தன் வசமாக்கியுள்ளது இந்திய ஹாக்கி அணி.

Trending News

Latest News

You May Like