இந்திய அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு..!
சமீபத்தில் பெங்களூருவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், 'டாஸ்' வென்ற ரோகித் சர்மா தவறாக 'பேட்டிங்' தேர்வு செய்தார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்னுக்கு சுருண்டது. போட்டியிலும் தோற்றது. தொடரை 0-3 என முழுமையாக இழந்தது.
அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோகித் பங்கேற்கவில்லை. பெர்த்தில் நடந்த இப்போட்டியில் இந்திய அணி கேப்டனாக பும்ரா மிரட்டினார். அணிக்கு தரமான வெற்றி தேடித் தந்தார்.
இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. இம்முறை ரோகித் அணிக்கு திரும்ப, மீண்டும் கேப்டனாக களமிறங்கினார். துவக்க வீரருக்கு பதில் 6வது இடத்தில் வந்த இவர், தடுமாற, இந்தியா தோற்றது.
தொடர்ந்து மெல்போர்ன் டெஸ்டில் துவக்க வீரராக களமிறங்கினார். இதனால் சுப்மன் கில் நீக்கப்பட்டார். கடைசியில் இந்தியா மீண்டும் தோற்றது.
2024ல் களமிறங்கிய 26 இன்னிங்சில் ரோகித்தின் சராசரி 24.76 ரன்னாக உள்ளது. ரோகித் விளையாடிய, கடைசி 15 இன்னிங்சில் 10ல் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானார். ஆஸ்திரேலிய தொடரில் 3, 6, 10, 3, 9 என மொத்தம் 31 ரன் தான் (சராசரி 6.2) எடுத்தார்.
இதையடுத்து சிட்னி டெஸ்டில் இருந்து ரோகித் நீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகின. இவருக்குப் பதில் மீண்டும் பும்ரா கேப்டனாக செயல்பட உள்ளார். சுப்மன் கில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.