மின்வாரியத்திற்கு அதிகரிக்கும் நஷ்டம்.. விரைவில் மின் கட்டணம் உயர்வு அறிவிப்பு வெளியாகலாம் !
மின்வாரியத்திற்கு அதிகரிக்கும் நஷ்டம்.. விரைவில் மின் கட்டணம் உயர்வு அறிவிப்பு வெளியாகலாம் !

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு ஆண்டுக்கு ஆண்டு நஷ்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2018 -19ம் நிதியாண்டில், மின் பகிர்மான கழகத்தின் நஷ்டம் 12,623 கோடி ரூபாயாக இருப்பதாக கூறப்பட்டள்ளது.
நிதிக்குழு பரித்துரைப்படி, 80,000 ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு மற்றும் 2014ஆம் ஆண்டில் இருந்து மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது தான், இந்த நஷ்டம் ஏற்பட்ட முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், 2013-14ல், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நஷ்டம் 13,985 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2015-16ல் 5,750 கோடி ரூபாயாக குறைந்தது. ஆனால், 2017-18ல் 7,761 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம் 2018-19ல் 12,623 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய, மின்கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்சாரத்தை வாங்கும் விலைக்கும், விற்பனை செய்யப்படும் தொகைக்கும் 2 ரூபாய் வித்தியாசம் இருக்கும் நிலையில், அதுவும் நஷ்டத்தை அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.
2014ஆம் ஆண்டில், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் எவ்வித லாபமும் இல்லை என்றும் மின்சார பகிர்மான கழக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இலவச மின்சாரத்திற்கு வழங்கப்படும் மானிய தொகையும் கால தாமதமாகவே கிடைப்பதாக கூறியுள்ளனர்.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால், மின் கட்டண உயர்வு கட்டாயம் இருக்கும் என சொல்லப்படுகிறது. எனினும் தேர்தல் முடிந்து முதல் நடவடிக்கையாகவும் அல்லது இப்போது கூட கட்டண உயர்வை அறிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in