1. Home
  2. தமிழ்நாடு

சீமான் வீட்டில் ரகளை சம்பவம்...சீமான் வீட்டு காவலாளி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்..!

Q

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த பிப்.27 விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சீமான் தரப்பில், அவரது வழக்கறிஞர்கள் 4 வார கால அவகாசம் கோரியிருந்தனர்.

இதனிடையே, பாலவாக்கத்தில் உள்ள சீமான் இல்லத்துக்கு பிப்.27ல் சென்ற வளசரவாக்கம் போலீஸார், சீமான் வீட்டில் பிப்.28 காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் ஒட்டினர். அப்போது அங்கிருந்த நாதக நிர்வாகி அந்த சம்மனை கிழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சீமான் வீட்டுக்குள் செல்ல முயன்ற காவல்துறையினரை அங்கிருந்த காவலாளி அமல்ராஜ் என்பவர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல், போலீஸார் ஒட்டிய சம்மனை கிழித்த நபர் நாதகவைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகியையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களுக்கு ஒரு மாத காலத்துக்கு பின்னர் ஜாமீன் கிடைத்தது.

இந்நிலையில் சம்மனை கிழித்த விவகாரத்தில் போலீஸார் தன்னை தாக்கியதாக சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

சீமான் வீட்டில் சம்மன் வழங்க வந்தபோது, சம்மனை கிழித்ததாக கூறி தன்னை கைது செய்த போலீஸார் தாக்கியதாக அமல்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காவல் நிலையம் அழைத்து சென்று முட்டி போடவைத்து இரும்பு ராடால் தாக்கியதாகவும் காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மற்றும் துணை காவல் ஆய்வாளர்கள் மீது அமல்ராஜ் புகாரளித்துள்ளார்

Trending News

Latest News

You May Like