எந்த விதத்தில் நியாயம் ? வாக்கு எந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குநர்களாக பாஜகவினர் நியமனம்..!
சென்னை அசோக் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
அதில், முக்கியமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்கும் வகையில் ஒப்புகைச் சீட்டுகளை முழுவதுமாக எண்ணி அதன் அடிப்படையில்தான் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது. வாக்கு எந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குநர்களாக பாஜகவினர் நியமிக்கப்பட்டுள்ளது பொதுத் தேர்தலை சீர்குலைக்கும் பாஜகவின் நோக்கம் என்றும் அக்கட்சி தெரிவித்தது.
மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தனது அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி முடக்கி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர், பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஹேமந்த் சோரன் மீது பொய் வழக்குகளைப் புனைந்து அவரைக் கைது செய்து இருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
2024 மக்களவை பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்றும், கூட்டணியைத் தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் நிறுவனரும் தலைவருமான தொல்.திருமாவளவனிடம் அளிப்பது என்றும் கூட்டம் தீர்மானிக்கிறது.
மேலும், திருச்சி சிறுகனூரில் 26.1. 2024 அன்று நடைபெற்ற ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் பத்து லட்சத்துக்கும் மேலானோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே நடத்தப்பட்ட மாநாடுகளில் இது போன்ற மாநாடு நடத்தப்பட்டவில்லை என்ற சாதனையைப் படைத்துள்ளனர்.
இதற்குக் காரணமாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்களுக்கும், நமது அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்த தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து சனநாயக சக்திகளுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.