தெலங்கானாவில் ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,500... இலவச வீட்டுமனை..

கர்நாடக மாநிலத்தில் மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, அதை நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டிலும் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதே போல, தெலங்கானா மாநிலத்திலும், மகளிருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் 6 முக்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படும் என கூறிய ராகுல் காந்தி, மகாலட்சுமி திட்டத்தின் கீழ் 3 அறிவிப்புகளை வெளியிட்டார்.
மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் எனவும், 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டருக்கு விநியோக்க்கப்படும் எனவும், தெலங்கானா மாநிலத்தின் அரசு நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும், வீடு இல்லாதவர்களுக்கு 250 சதுர அடியில் வீட்டு மனையும், வீடு கட்ட 5 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவித்தார்.
முதியவர்களுக்கு மாத ஓய்வூதியம் 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும் எனவும் ராகுல் காந்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.