தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என கூறி வழக்கறிஞர் சகோதரிகள் திடீர் ஆர்ப்பாட்டம்..!
மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் சகோதரி ஆ.நந்தினி, ஆ.நிரஞ்சனா. ஏற்கெனவே மதுவிலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை உட்பட வெளியூர்களில் நந்தினி, அவரது தந்தையும் அடிக்கடி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், 'மதுக்கடையை மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்த ரூ.10.72 லட்சம் கோடி வராக்கடனை வசூலித்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் இன்று மதியம் செயின்ட்மேரீஸ் தேவலாயம் பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
பின்னர் அவர்கள் அப்பகுதியிலுள்ள கனரா வங்கி எதிரே இருவரும் சாலையில் அமர்ந்து திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த கீரைத்துறை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.