அரியானாவில் ஒரே கட்டமாக அக். 1-ல் தேர்தல்..!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்கியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் விசாரணை நடத்தப்பட்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, ஜம்மு காஷ்மீரில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே கடந்த மாதம் ஸ்ரீநகரில் பிரதமர் நரேந்திர மோடி, விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும், மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதி குறித்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். 2-ம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். 3-ம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியிடப்பட உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 87 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதில் 3.71 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்களாக உள்ளனர். நகர்புறத்தில் 2332, கிராமப்புறங்களில் 9506 என மொத்தம் 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள 90 சட்டசபைத் தொகுதிகளில் 74 பொது மற்றும் 16 இடஒதுக்கீடு (எஸ்டி 9. எஸ்சி 7) ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியானா சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சமீபத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரியானாவில் தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரியானா தேர்தல் தேதியை அறிவித்தார். அவர் கூறியதாவது:-
அரியானா மாநிலத்தில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பாணை செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் செப்டம்பர் 12-ம் தேதி ஆகும். அதன்பின்னர் செப்டம்பர் 13-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு செப்டம்பர் 16-ம் தேதி கடைசி நாள். அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அரியானா மாநிலத்தில் 2 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக நகர்ப்புறங்களில் 7,132 வாக்குச்சாவடிகள், 13,497 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். குருகிராமம், சோனிபட் மற்றும் பரிதாபாத் நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானாவில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இரு மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் அக்டோபரல் 04ல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்:
முதல் கட்ட தேர்தல்
- வாக்குப்பதிவு - செப்.18-ம் தேதி
- மனுத்தாக்கல் - ஆக.20-ம் தேதி.
- மனுத்தாக்கல் கடைசி நாள் - ஆக.27-ம் தேதி.
- வாபஸ் பெற கடைசி நாள் - ஆக.30-ம்தேதி.
2-ம் கட்ட தேர்தல்
- வாக்குப்பதிவு - செப்.25-ம் தேதி
- மனுத்தாக்கல் - ஆக.29-ம் தேதி.
- மனுத்தாக்கல் கடைசி நாள் - செப்.5-ம் தேதி.
- வாபஸ் பெற கடைசி நாள் - செப்.29-ம்தேதி.
3-ம் கட்ட தேர்தல்
- வாக்குப்பதிவு - அக்.1-ம் தேதி
- மனுத்தாக்கல் - செப்.25-ம் தேதி.
- மனுத்தாக்கல் கடைசி நாள் - செப்.12-ம் தேதி.
- வாபஸ் பெற கடைசி நாள் - செப்.17-ம்தேதி.
- தேர்தல் முடிவு - அக். 4-ல் வெளியீடு
அரியானா மாநில தேர்தல்:
- ஒரே கட்டமாக தேர்தல்
- வாக்குப்பதிவு - அக்.1-ம் தேதி
- மனுத்தாக்கல் - செப்.5-ம் தேதி.
- மனுத்தாக்கல் கடைசி நாள் - செப்.12-ம் தேதி.
- வாபஸ் பெற கடைசி நாள் - செப்.16-ம்தேதி.
- தேர்தல் முடிவு - அக். 4-ல் வெளியீடு.