1. Home
  2. தமிழ்நாடு

உண்மையில் கடவுள் ராமர் இருப்பதால் தான் மக்களவைத் தேர்தலில் அயோத்தியில் பாஜகவை தோற்கடித்துள்ளார் : சீமான்..!

1

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் அனல் பறந்து வருகிறது. தேர்தல் களத்தில் மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக, தேமுதிக ஏற்கெனவே இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஆகவே, ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிரான வாக்குகளை தங்கள் கட்சியின் பக்கம் இழுக்க பாமகவும் நாதகவும் மிகக் கடுமையாகப் போராடி வருகின்றன. சுவரொட்டிகளில் பாமக, ஜெயலலிதா படத்தைப் போட்டு வாக்குக் கேட்டு வருகின்றது. பாமக ஏன் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது என்ற கேள்விக்குப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் பதிலளித்திருக்கிறார். அவர், “டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எங்கள் கூட்டணியில் உள்ளது. ஒபிஎஸ் எங்கள் கூட்டணியில் உள்ளார். ஆகவே, ஜெயலலிதாவின் படத்தை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்” என்று கூலாக பேசியுள்ளார்.

அதேபோல் நாதக வேட்பாளர் அபிநயா இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் உதயசூரியனுக்கு ஓட்டுப் போடமாட்டார்கள். அது அவர்கள் மரபிலேயே கிடையாது. இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்ட கை சூரியனுக்கு ஒருபோதும் போடவே போடாது. அதிமுக தொண்டர்களுக்கு முன்பாக உள்ள ஒரே தேர்வு நாங்கள்தான். பாமக என்பது எப்போதும் அதிமுக தொண்டர்களின் தேர்வாக இருக்காது. எனவே எங்கள் கட்சிக்கும் எனக்கு வாய்ப்பு பலமாக உள்ளது” என்கிறார்.

இந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களின் கட்சித் தலைவரான ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்தி வருவது குறித்துப் பேசும் போது, “இது எங்களுக்குப் பெருமையான விசயம்தான். ஜெயலலிதாவின் படத்தைப் போட்டால்தான் வாக்குகள் கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அந்தளவுக்கு வலிமையான தலைவராக அவர் இருப்பது எங்களுக்குப் பெருமை” என்று பட்டுப்படாமல் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் விக்கிரவாண்டி பிரச்சாரக் களத்தில் பேசிய சீமான் ராமர் கோயில் விவகாரம் பற்றியும் மோடி பற்றியும் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அவர் ராமர் உண்மையில் இருக்கிறார் என்று சொன்ன விசயம் இப்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. பிரச்சாரக் கூட்டத்தின் போது சீமான் பேசியதாவது:-

கட்டி முடிப்பதற்கு முன்பே அவசர அவசரமாக ராமர் கோயிலை செட் போட்டு திறந்தார்கள். இப்போது அந்தக் கோயில் கூரை பெய்த மழையில் ஒழுகுகிறது. தேர்தலுக்கு முன்பே அதைத் திறக்க வேண்டும் என்ற நிர்பந்தம் மோடிக்கு ஏன் வந்தது? மக்களுக்கு கடவுள் மீது உள்ள நம்பிக்கையை வைத்து அதை வாக்காக மாற்றுவதற்காக அதைச் செய்தார். இது ஒரு கேவலமான அரசியல். கேடுகெட்ட அரசியல். கட்டி முடிக்கப்படாத போது அதைத் திறந்தார் மோடி. இந்த ராமர் கோயிலை திறந்துவிட்டால், இந்துக்கள் அனைவரும் தங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள். கடைசியில் என்ன ஆனது?

உத்தரப்பிரதேசத்தில் தம்பி அகிலேஷ் யாதவ். தனது கட்சி சார்பாக அயோத்தி நகரத்தை உள்ளடக்கியுள்ள பொதுத் தொகுதியில் ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தி பாஜகவை தோற்கடித்திருக்கிறார். அத்துடன் பாஜக கதை முடிந்தது. உண்மையிலேயே ராமர் இருக்கிறார். அவர் இருப்பதால்தான் பாஜகவை இனிமேல் வரவிடக் கூடாது என்று அவரே இவர்களை ஒழித்துவிட்டார். அப்போது ராமர் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்.

மின்சாரம் தயாரிக்கத் தமிழக அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை. உற்பத்தி செய்யக் கூடிய எதையும் இந்த அரசு செய்யாது. ஆனால், பல ஆயிரம் கோடியைக் கொள்முதல் செய்யச் செலவு செய்வார்கள். ஏனென்றால் அதில்தான் கமிஷன் கிடைக்கும். ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு கமிஷன் என்று போட்டல் பல ஆயிரம் கோடி கிடைக்கும். ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காற்றாலையில் மின்சாரம் தயாரிப்போம். கடல் அலையில் துபாயில் மின்சாரம் தயாரிக்கிறார்கள். அதை இங்கே செய்ய முடியாதா? ஏன் முடியாது? நாங்கள் அதைச் செய்வோம். ஆகவேதான் இவர்களை நாங்கள் கமிஷன் பாய்ஸ் என்கிறோம். இவர்கள் முதல்வர் இல்லை. அமைச்சர்கள் இல்லை. கமிஷன் வாங்குபவர்கள் என்று அதற்காகத்தான் சொல்கிறோம். தமிழ்நாடு எதையும் தயாரிக்கவில்லை. வெறும் குவாட்டர், ரம், ஜின், விஸ்கியைத்தான் தயாரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like